அந்திம நேரத்தில் சொன்ன நாமம் - 2
அஜாமிளன் மரணப் படுக்கையில் இருந்துகொண்டு நாராயணா என்று மகனை அழைத்ததற்கு அவனுக்கு வைகுண்டம் நிச்சயமாகி விட்டது...
யம கிங்கரர்களுக்கு ஒரே குழப்பம், பயம். தர்மராஜன் கடிந்துகொள்வார் என்று பயந்துகொண்டே திரும்பிச் சென்றனர்.
இவர்கள் வெறும் கையோடு வந்ததைப் பார்த்ததும், அவருக்குக் கோபம் வந்தது.
மூவரும் நடுக்கத்தை மறைத்துக் கொண்டு அவரை வணங்கினர்.
என்னாயிற்று?
ஏன் உயிரைக் கொண்டுவரவில்லை. அந்த ஜீவனுக்கு இன்றோடு பூலோக வாசம் முடிகிறது. மஹாபாபியென்று சொல்லித்தானே அனுப்பினோம்.
ஆம் ஐயா, ஆனால் அவன் ஒரு கூச்சல் போட்டான்..
கடும் கோபம் வந்தது எமனுக்கு.
ஏனடா, நாம் என்ன வாழ்த்தவா செல்கிறோம். உயிரை உடலிலிருந்து பாசம் போட்டுக் கடைந்து பிரித்து எடுத்தால், உடலின் அத்தனை நரம்புகளையும் பிழிவதுபோல் வலிக்கத்தான் செய்யும். அவன் சிரிப்பானா என்ன?
அழுவான், கூச்சல் போடுவான். அதற்கெல்லாம் பயந்து விட்டுவிட்டால் கடமை தவறிய பாவம் சம்பவிக்காதா? என்னிடம் வேலை செய்ய உமக்குத் தகுதியில்லை..
கூச்சலுக்கு பயந்து ஜீவனை விடலாமா?
அதில்லை. அதற்கெல்லாம் பயப்படமாட்டோம். அவன் வேறொரு கூச்சல், வித்தியாசமாகப் போட்டான்.
என்ன கத்தினான்?
நாராயணா என்று கத்தினான் ஸ்வாமி
அவ்வளவுதான்.. யமதர்மராஜாவுக்கு மேனி சிலிர்த்தது. இருக்கையிலிருந்து சட்டென்று எழுந்தார்.
என்ன? என்ன சொன்னார்?
மறுபடி சொல்லுங்கள்..
நாராயணா என்று சொன்னான் ஸ்வாமி..
பிறகென்னவாயிற்று?
கேட்டுக்கொண்டே சிம்மாசனத்திலிருந்து இறங்கி எம தூதர்களின் அருகே வந்துவிட்டார் தர்மராஜன்.
இவ்வளவு அருகில் அவர்கள் தங்கள் மஹாராஜாவை தரிசனம் செய்ததே இல்லை. அவர் கண்களிலிருந்து கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது. அவரது முகம் மலர்ந்திருந்ததைப் பார்த்ததும் தைரியம் வந்து மேலே சொல்லத் துவங்கினர்.
மஹாராஜா, அவன் நாராயணா என்று கத்தியதும் திடீரென்று நான்கு பேர்கள் வந்தனர். அவர்கள் மிக மிக அழகாக ஒளி பொருந்தியவர்களாக இருந்தனர். அவர்களுக்கு நான்கு கைகள் இருந்தன. நிறைய ஆபரணங்கள் போட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் வந்ததுமே, நாங்கள் அந்த அஜாமிளனின் மீது வீசியிருந்த பாசக்கயிறு அறுந்துவிட்டது ஸ்வாமி..
என்று அறுந்த கயிற்றைக் காண்பித்தனர்.
நீங்கள் அவர்களைப் பார்த்தீர்களா?
பெரும் பாக்யம் செய்தீர்கள். என்ன சொன்னார்கள் அவர்கள்?
அவர்கள் இதுவரை இவன் செய்த பாவமெல்லாம் தீயிலிட்டதுபோல் பொசுங்கிவிட்டது. வேண்டுமென்றால் போய் இவனது பாவக் கணக்கை சரிபாருங்கள் என்றனர்.
அப்படியா?
தர்மராஜாவின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாய்ப் பெருகியது.
ஸ்வாமீ..
தயங்கித் தயங்கிக் கூப்பிட்டார்கள்
அவர்கள் யார்? அவர்கள் பெயரைக் கேட்டதும் நீங்கள் ஏன் மகிழ்ச்சி அடைகிறீர்கள்?
நீங்கள்தான் எல்லா உலகிற்கும் ஸ்வாமி என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
நாராயணன் யார்?
அவர் பெயரைக் கூப்பிட்டால் அவரது பார்ஷதர்கள் ஏன் வருகிறார்கள்?
அஜாமிளன் பெரிய பாவியாயிற்றே ஒரே ஒரு முறை நாராயணா என்று கூப்பிட்டால் 80 வருடங்களுக்கு மேலாகவும், அதற்கு முன் ஜென்மங்களிலும் அவன் இழைத்த பாவங்கள் அனைத்தும் பொசுங்கிவிடுமா?
அத்தனை ஜீவன்களின் பாவ புண்யக் கணக்கைச் சரி பார்த்து, அவர்களுக்கு அவற்றின் பலனைச் சரியாக வழங்கும் யம தர்மராஜன் சொன்னார்.
முழுமுதற் கடவுள் பரவாசுதேவனான அந்த நாராயணர்தான். அவரது நியமனப்படிதான் உலகில் அத்தனையும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அந்த நாராயணனின் பார்ஷதர்கள் அவரைப் போலவே இருப்பார்கள். அவர்களைப்
பார்ப்பதே பெரும் பாக்யம்.
எவனொருவன் தனது உயிர் போகும் தருவாயில் அவரது பெயரைச் சொல்லி அழைக்கிறானோ, அவனது பாவங்கள் அனைத்தும் அக்கணமே அழிந்துவிடுகின்றன. அவனுக்கு நமது லோகத்தில் வேலையில்லை.
இனி நீங்கள் உயிர்களைக் கவர்ந்துவரப் போகும்போது அந்த ஜீவன் பகவானின் பெயரைச் சொல்லி அழைத்தால், அவரை வணங்கிவிட்டு வந்துவிடுங்கள்.
ஸ்வாமி, இது என்ன புதிய விதிமுறை?
இது புதிய விதியல்ல. மிகவும் பழமையானதுதான். பகவானால் உபதேசிக்கப்பட்டது. பாகவத தர்மம் எனப்படும். மிகவும் ரகசியமானது. பரமேஸ்வரன், ப்ரும்மா, நாரதர், ஸ்கந்தன், கபிலர், மனு, ப்ரஹலாதன், ஜனகர், பீஷ்மர், பலி, சுகர், நான் ஆகிய பன்னிருவருக்கே தெரியும்.
மஹாராஜ், இந்த அஜாமிளனின் கதை உலகிற்குத் தெரிந்தால் எல்லாரும் வாழ்நாள் முழுதும் பாவத்தைச் செய்துவிட்டு இதே போல் கடைசித் தருணத்தில் நாமம் சொல்வார்களே.
பிறகு நமக்கென்ன வேலை?
எமலோகத்தை மூடி விட வேண்டியது தானா?
இடி இடியென்று சிரித்தார் தர்மராஜா.
ஏனென்று அடுத்த பதிவில் பார்ப்போம்..
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
No comments:
Post a Comment