Wednesday, January 29, 2020

நாமம் ஒன்றே போதுமே.. - 13

படை வரும் முன்னே..

ஆத்மாராம் சிறந்த ராமபக்தர். ஒரு நன்னாளில் துளசிச் செடியின் அடியில் புதிதாய்ப் பிறந்த ஆண்மகவு கிடைத்தது. அந்தப் பச்சிளம் குழந்தை ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அருகே சென்று காதை வைத்துக் கேட்டால் ராம ராம ராம என்று ஜபம் செய்து கொண்டிருந்தது. மிகவும் மகிழ்வடைந்த ஆத்மாராம் துளஸிதாஸ் என்று பெயரிட்டு வளர்த்தார். ராமபக்தியில் தந்தைக்குச் சளைத்தவரல்ல துளஸி.
ஆத்மாராம் தில்லியிலிருந்த முகலாய அரசருக்கு ஆன்மீக ஆலோசகராக பதவி வகித்து வந்தார். அரசன் அழைக்கும்போது அரண்மனைக்குச் சென்று அவருக்கு புராண இதிஹாசங்களை எடுத்தியம்புவது அவரது வேலை. அதற்காக அவருக்கு மானியங்கள் வழங்கப்பட்டன.

ஆத்மாராமுக்கு மிகவும் வயதாகிவிட்டதால், அரசன் துளசிதாசரைத் தனது ஆன்மீக ஆலோசகராக நியமித்தார்.

துளசியும் அவ்வப்போது அரண்மனைக்குச் சென்று பாதுஷாவிற்கு கதைகள் சொல்லிவிட்டு வருவார்.

ஒருநாள் அரசனுக்கு திடீரென்று ஒரு அவா எழுந்தது. திரும்பத் திரும்ப எல்லாரும் ராமன் ராமன் என் கிறார்களே. அந்த ராமனை நாமும் தரிசனம் செய்தால் என்ன? என்று தோன்றியது. உடனே துளசிக்கு ஆளனுப்பி அவரை வரவழைத்தான்.

தாசரே, எனக்கு ஒரு சந்தேகம்.

சொல்லுங்கள் மன்னா..

உங்கள் ராமன் உங்கள் மதத்தவருக்கு மட்டும்தான் காட்சி கொடுப்பாரா? அல்லது வேற்று மதத்தவருக்கும் அவரது தரிசனம் கிடைக்குமா?

சிரித்தார் துளசிதாசர்.

இறைவன் அனைவருக்கும் பொதுவானவர் அரசே. எல்லோருக்கும் காட்சி கொடுப்பார்.

நிஜமாகவா?

நிச்சயமாக.

என்றால். எனக்கொரு உதவி செய்யுங்கள்.

என்ன?

உங்கள் ராமனிடம் சொல்லி அவரை எனக்கு தரிசனம் தரச் சொல்லுங்கள்.

மன்னா, நீங்கள் ராம தரிசனத்திற்கு ஆசைப்படுவது மிகவும் மகிழ்ச்சி. ராமன் நிச்சயம் தரிசனம் கொடுப்பார்.
நானே உங்களுக்கு ராம நாமத்தை உபதேசம் செய்கிறேன். நீங்கள் அதை பதிமூன்றரைகோடி முறை ஜபம் செய்தால் ராம தரிசனம் கிட்டும்.

தாசரே, என்னால் ஜபம் எல்லாம் செய்யமுடியாது. நீங்கள் சிபாரிசு செய்தால் உங்கள் ராமன் என் முன்னால் வருவார்.

அது முடியாது மன்னா. இறைவனின் காட்சியைப் பெற பொறுமையும், அவனைக் காணவேண்டும் என்ற தாபமும் மிக முக்கியம். ஜபம் செய்யச் செய்ய மனம் பக்குவப்பட்டு இறைக் காட்சிக்கான தகுதி தானே வரும். அப்போது ராமன் தோன்றுவார்.

தாசரே, எனக்கு அதற்கெல்லாம் பொறுமையில்லை. இப்பொழுதே நீங்கள் ராமரை வரச் சொல்லுங்கள்.

அப்படிச் செய்ய முடியாது மன்னா..

என் கட்டளையை மீறினால்,  சிறைவாசம் தான் உமக்கு.

பரவாயில்லை மன்னா.

அவ்வளவுதான். துளசிதாசர் சிறையில் தள்ளப்பட்டார்.

சிறைக்குள் அமர்ந்து ஏகாந்தமாக ராமநாமத்தை ஜபம் செய்யத் துவங்கினார்.

நள்ளிரவில் அரண்மனை முழுதும் ஒரே சத்தம். பொருள்களெல்லாம் உடைபட்டன.

எல்லோரும் அலறிக்கொண்டு அங்குமிங்கும் ஓடினர். காரணம், எங்கிருந்தோ பெரிய பெரிய மலைக் குரங்குகள் வந்து அரண்மனையை த்வம்சம் செய்துகொண்டிருந்தன.

பாதுஷாவின் தலை மீதேறி, தாடியைப் பிய்த்து, பிராண்டி, அவரது மனைவிகளை யெல்லாம் கடித்து, கண்ணாடிகளை உடைத்து ஒரே ரகளை.

ஆயிரக்கணக்கான குரங்குகள் எங்கிருந்து வந்திருக்கும்?

ஒன்றுமே புரியவில்லை. திடீரென்று அரசருக்கு உரைத்தது. ஒருவேளை துளசிதாசருக்கு தண்டனை கொடுத்தால் இருக்குமோ?

சிறைக்கு ஓடினார்.

தாசரே, தாசரே..

என்னவாயிற்று மன்னா?
எதிரிகள் படையெடுப்பா? ஏன் இவ்வளவு பதற்றம்? உடல் முழுதும் காயங்கள்?

தாசரே, அரண்மனை முழுதும் குரங்குகள் அட்ஹாசம் செய்கின்றன. எங்கிருந்து வந்தன? ஏன் வந்தன? ஒன்றும் புரியவில்லை.

துளசிதாசருக்கு ஏதோ புரிந்தாற்போல் இருந்தது.

ஒன்றுமில்லை மன்னா..
நீங்கள் ராம தரிசனம் கேட்டீர்களல்லவா?

ஆமாம்..

ராமர் பெரிய ராஜாவாக இருந்தாலும் அவரது படை வானரப் படைதானே.
அரசர் வருவதற்கு முன்னால், படையெல்லாம் வரும். இன்னும் பெரிய படையெல்லாமும் தொடர்ந்து வரும் மன்னா. கடையாகத்தான் ராஜாவான ராமர் வருவார்.

போதும் தாசரே போதும். எனக்கு இந்தப் படைகளின் தரிசனமே போதும். ராமரைப் பார்க்கும் உங்களையே பார்த்துக் கொள்கிறேன். இந்த வானரங்களைத் திரும்பிப் போகச் சொல்லுங்கள்.

துளசிதாசர் சிரித்துக் கொண்டே மறுபடி ராமநாமம் சொல்லி ராமனிடம் ப்ரார்த்தனை செய்தார்.

சற்று நேரத்தில் அத்தனை குரங்குகளும் திரும்பிச் சென்று விட்டன..

இறையடியார்கள் சரணத்தைப் பிடித்துக்கொள்வதே  இறைவனின் கருணையை அடைய சுலபமான வழியாகும். 

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment