ஜீவன் உள்ளது பகவன் நாமம்
பகவன் நாமம் என்பது நெருப்பைப் போன்றது. அதன் அக்ஷரங்கள் ஒளிமயமானவை. ஒரு மஹாத்மாவின் நாவிலிருந்து உபதேசமாக வெளிப்படும் நாமம் மிகவும் சக்தி வாய்ந்தது. அதை தினமும் சொல்லச் சொல்ல நாமத்தின் சக்தியால், பாவங்கள் அழிவதோடு, தீவினைகளும் நெருங்குவதில்லை.
கபீர்தாஸ் என்ற மஹாத்மா, காசியில் வாழ்ந்துவந்தார். ராமானந்தர் என்ற மஹாத்மாவிடம் உபதேசம் பெற்று விடாமல் நாமத்தைச் சொல்லி பெரிய மஹாத்மாவகத் திகழ்ந்தார். வேற்று மதத்தவரானாலும், ராமநாமத்தின் மீது அளவிலாக் காதல் கொண்டவர். விக்ரஹமோ, படமோ, பூஜைகளோ ஒன்றும் கிடையாது. அனவரதும் நாமம் சொல்வது மட்டுமே அவரது உபாசனை.
அவரது மகன் கமால் என்பவரும் தந்தையிடமே ராமநாம உபதேசம் பெற்று, பெரிய மஹாத்மாவாகிவிட்டிருந்தார்.
ஒரு சமயம் கமால் சிறுவனாக இருந்தபோது கடைவீதியில் சுற்றிக்கொண்டிருந்தார். அவரிடம் பேசிக் கொண்டிருந்த ஒரு பெரியவர், கமாலின் தேஜஸைப் பார்த்துவிட்டு எனக்கு மந்திரோபதேசம் செய்யுங்கள் என்று வேண்டிக்கொண்டார்.
கமாலும், நாம உபதேசத்தை மறுக்க மனமின்றி அவருக்கு ராமநாமத்தை உபதேசம் செய்தார்.
அந்தப் பெரியவர் பெரிய செல்வந்தர். உபதேசம் பெற்றதும் மகிழ்ந்துபோய் தன்னிடம் இருந்த ஒரு விலை உயர்ந்த ரத்தினக்கல்லை அன்பளிப்பாகக் கொடுத்தார். கமால் எவ்வளவு மறுத்தபோதிலும், அவர் விடாப்பிடியாக கமாலிடம் கொடுத்து விட்டார்.
வீட்டுக்குச் சென்றதும் கமால் அந்த ரத்தினக்கல்லைத் தந்தையிடம் காட்டினார்.
ஏது இது?
கடைத் தெருவில் நடந்தவற்றை பயந்துகொண்டே விவரித்தார் கமால்.
அவ்வளவுதான் கபீர்தாசருக்கு வந்ததே கோபம்.
பக்கத்தில் இருந்த ஒரு கம்பை எடுத்து கமாலை நையப்புடைத்துவிட்டார்.
அப்பா எதுக்குப்பா அடிக்கறீங்க?
பகவானையே பெற்றுத்தரும் உயர்ந்த பகவன் நாமத்தை போயும் போயும் ஒரு ரத்தினக் கல்லுக்கு ஆசைப்பட்டு வித்துட்டியா? என்று கத்தினார்.
அப்பா, நான் வேணாம்னுதான் சொன்னென். அவர்தான் என் தலைல கட்டி அனுப்பினார்.
அதெல்லாம் எனக்குத் தெரியாது. முதல்ல நீ போய் நீ உபதேசம் செய்த நாமத்தை திருப்பி வாங்கிட்டு வா.
இல்லன்னா, நீ என் பையனே இல்லன்னு உன்னை தலைமுழிகிடுவேன்.
அப்பா, அப்படியெல்லாம் சொல்லாதீங்க. நான் தெரியாம பண்ணிட்டேன். அவரைக் கண்டுபிடிச்சு நாமத்தைத் திருப்பி வாங்கிட்டு வரேன். ஆனா உபதேசம் செய்த நாமத்தை எப்படித் திருப்பி வாங்கறதுன்னு சொல்லுங்கப்பா என்று அழுதார்.
கபீர் சொன்ன பதிலைக் கேட்டுக்கொண்டு அழுதுகொண்டே கமால் மறுபடி கடைவீதிக்கு வந்தார். எவ்வளவு தேடியும் அந்தப் பெரியவரைக் காணவில்லை. ஒரு வழியாக வெகு நேரம் தேடி ஒருவாறு அவரைக் கண்டுபிடித்தார்.
அழுதுகொண்டே வந்த கமாலைப் பார்த்ததும் அந்த செல்வந்தர்,
ஏம்பா அழுதுக்கிட்டே வரீங்க?
இதோபாருங்க, இந்தாங்க உங்க ரத்தினம். நான் வாங்கமாட்டேன் னு சொல்லியும் என்கிட்ட கொடுத்தீங்கல்ல?
இப்ப நான் கொடுத்த நாமத்தை திருப்பிக் கொடுங்க..
அந்தப் பெரியவருக்கு சிரிப்பு வந்துவிட்டது.
சிறுபிள்ளையா இருக்கியே கமால். ரத்தினத்தைத் திருப்பிக் கொடுக்கலாம். நாமத்தை எப்படித் திருப்பிக் கொடுக்கறது?
இங்க வாங்க
என்று அவரை அழைத்துக்கொண்டு அங்கிருந்த பெரிய பாறையின் அருகே சென்றார் கமால்.
கபீர் தாசரின் மகனான கமால் எனக்கு உபதேசம் செய்த நாமத்தை அவரிடமே திருப்பிக்கொடுத்தேன். ராம ராம ராம என்று சொல்லி இந்தக் கல்லின்மீது துப்புங்கள்.
அந்தச் செல்வந்தருக்கு ஒரே வியப்பு.
இருந்தாலும் சொன்னதைச் செய்வோம் என்று கமால் சொன்னபடியே சொல்லி அந்தப் பாறையின் மீது துப்பினார்.
அவ்வளவுதான்! இடுப்பளவு உயரமாக இருந்த அந்தப் பெரிய பாறை நாமத்தின் சக்தியைத் தாங்கமுடியாமல் வெடி வைத்துத் தகர்த்ததுபோல் வெடித்துச் சிதறியது.
வாயடைத்துப் போன அந்தச் செல்வந்தர் கமாலையும் அழைத்துக்கொண்டு கபீர்தாசரிடம் சென்று நாமத்தைச் சாதாரணமாக எண்ணியதற்காக மன்னிப்பு வேண்டினார்.
ஒரு குருவிடமிருந்து பெறப்படும் நாம உபதேசம் மிகவும் சக்தி வாய்ந்தது.
மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் மதுரகீதம்
ராகம் கௌரி மனோஹரி
பல்லவி
ஜீவன் உள்ளது பகவன் நாமம்
அனுபல்லவி
எளிமையானது இனிமையானது
ஒளிமயமானது மகிமை வாய்ந்தது (ஜீவன்)
சரணம்
நாம கீர்த்தனமே த்யானம் ஆகும்
நாம கீர்த்தனமே நல்ல தவமாகும்
நாம கீர்த்தனமே யோகம் ஆகும்
நாம கீர்த்தனமே நல்ல சமாதியாகும் (ஜீவன்)
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசங்களில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
No comments:
Post a Comment