கைவல்யம் தரும் மஹாமந்திரம்
செய்யாற்றில் எண்பது வயது மதிக்கத்தக்க ஒரு பாட்டி இருந்தார்.
எங்கள் வீட்டில் வாரம் தோறும் ஞாயிறன்று மாலை 4 மணிக்கு ஆரம்பித்து மஹாமந்திரம் நடக்கும். அந்தப்பாட்டி நாமா ஆரம்பிக்கும் முன்னர் சரியாக 3:55 வாக்கில் வந்துவிடுவார்.
ஒருமணிநேரம் சத்தமாக நாமம் சொல்வார். ஒரு சமயம் மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி அங்கு விஜயம் செய்திருந்தபோது,
பாட்டி சரியா நாமா ஆரம்பிக்கும் போது வந்துடறாங்களே..
என்று வியந்தார்.
பாட்டி அப்போது ஸ்வாமிஜியிடம் தனக்கு கைவல்யம் வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.
சில நாட்கள் கழித்து, அந்தப் பாட்டி, சேலத்திலிருக்கும் தன் மகனோடு காசி யாத்திரை செல்லப்போவதாக சொல்லிவிட்டு விடைபெற்றுச் சென்றார்.
ஒரு மாதம் கழித்து எங்கள் வீட்டிற்கு ஒருவர் வந்தார். அந்த நாமா சொல்லும் பாட்டியின் மூத்தமகன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவர், மேலும் கூறியதாவது
நாங்கள் காசிக்குச் சென்று என் தந்தைக்குச் செய்யவேண்டிய பித்ருகாரியங்களை செய்தோம். பின்னர் பத்ரிநாத் சென்றோம். அம்மா வரும்போதே மிகவும் பரவசத்துடன் இருந்தார். ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டு வெளியில் வந்தோம்.
அம்மா கோவில் வாசலில் இருந்த ஒரு பெரிய கல்லின் மீது அமர்ந்தார்.
முடியலடா.. கொஞ்ச நேரம் கழிச்சுப் போகலாம்
என்று சொன்னவர்.
உரத்த குரலில் மஹாமந்திரம் சொல்லிக்கொண்டே இருந்தார்.
இரண்டுமணி நேரம் அங்கேயே அமர்ந்து நாமம் சொல்லிவிட்டு அப்படியே சரிந்துவிட்டார்.
அங்கிருந்த பண்டா ஓடிவந்து, வணங்கிவிட்டு
இவர்
ஹரிசரணத்தை அடைந்துவிட்டார்.
ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டு நாமா சொல்லிக்கொண்டு போயிருக்கிறார். இவருக்கு நீங்கள் வேறெந்த கர்மாவும் செய்யத் தேவைல்லை. வைகுண்டம் போய்விட்டார். அளகநந்தாவில் இவரை விட்டுவிட்டு, நீங்கள் யாத்திரையைத் தொடருங்கள்.
வருந்தக்கூடாது. யாருக்கும் கிட்டாத பெரும்பேறு. ஊருக்குச் சென்றதும் ஸமாராதனை செய்யுங்கள்
என்று கூறி எங்களைத் தேற்றி அனுப்பி வைத்து விட்டார்.
இங்கு வந்ததும் தான் தெரிந்து கொண்டேன். வழக்கமாக உங்கள் வீட்டிற்கு வந்து நாமா சொல்வார் என்று. உங்களிடம் விஷயத்தைத் தெரிவித்து விட்டுப் போகலாம் என்று வந்தேன்.
என்றார்.
அந்தப் பாட்டியின் இளைய மகன் சொன்னார், அம்மா தினமுமே வீட்டில் மஹாமந்திரம் சொல்வார், மேலும் நேரா கைவல்யம் கிடைக்கணும். ஜென்மா வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருப்பார்.
எப்போதோ நிகழ்ந்ததல்ல, புராணமும் அல்ல. சில வருடங்களுக்கு முன்பு தான் எங்கள் கண்ணெதிரே நிகழ்ந்த நாமவைபவம்...
மண்ணுலக ஆசை முதல்
விண்ணுலக ஆசை வரை
அனைத்தையும் நல்கும் மஹாமந்திரம் சொல்வோம்!
நன்மை பெறுவோம்!
-பாலா சிவகுமார் (ஹரிப்ரியா)
No comments:
Post a Comment