வேடன் எழுதிய காவியம் - 2
நாரதரைக் கட்டிப் போட்டுவிட்டு வீட்டுக்குச் சென்றான் ரத்னாகரன்.
என்ன அதுக்குள்ள வந்துட்டீக?
ஒன்னும் கொண்டாரலையா?
அது கிடக்கு. நான் ஒன்னு கேக்கறேன். அதுக்கு பதில் சொல்லு.
என்ன கேக்கப்போறீக?
நான் தினமும் வேட்டையாடி, கொள்ளையெல்லாம் அடிச்சுத்தான் வீட்டுக்கு வேணுங்கறதையெல்லாம் கொண்டுவாரேன். அது உனக்குத் தெரியுமா?
ஆமா, அதுக்கென்ன?
அதனால, பாவம் வருமாமே..
ம்ம். அதுக்கு?
பாவம் செய்தவங்களுக்கு கடவுள் தண்டனை கொடுப்பாராமே..
ஆமா.. எங்கம்மா சொல்லிருக்கு..
நான் கொண்டுவர பொருளெல்லாம் உங்களுக்குத் தானே கொடுக்கறேன். நீங்கதானே அனுபவிக்கிறீக?
என்னதான் சொல்லவர்ரீக?
நான் செய்த பாவத்திலயும் பங்கு வாங்கிப்பீங்களா?
இதென்ன இப்படி கேட்டீக?
சொல்லு. பாவத்தில் சம்பதிச்சதெல்லாம் அனுபவிக்கிறீங்க. பாவத்துக்கான தண்டனையும் என்னோட சேர்ந்து உங்களுக்கும் வருமா?
அதெப்படி வரும்?
ஏன் வராது?
நான் உங்க பொஞ்சாதி. என்னையும் நம்ம புள்ளைங்களையும் காப்பாத்தறது உங்க கடமை. அதுக்கு நீங்க சம்பாதிக்கிறீக? பாவம் செஞ்சு கொண்டாங்கன்னு நான் சொல்லலியே..
நீங்க நல்லவிதமா கொண்டுவரலாமே. நானா உங்களை கொலை, வழிப்பறியெல்லாம் செய்யச்சொன்னேன்? எங்களுக்கெப்படிப் பாவம் வரும்?
மிகவும் உடைந்துபோன ரத்னாகரன், வயதான தாய் தந்தையரிடமும் சென்று இதே கேள்வியைக் கேட்டான்.
அம்மா, அப்பா, நீங்க சொல்லுங்க.
நான் கொண்டு வர பொருளெல்லாம் உங்ககிட்டதான் கொடுக்கறேன். பாவத்திலயும் பங்கு வாங்கிப்பீங்கதானே?
இல்லையேபா, எங்களைப் பாத்துக்கற பொறுப்பு உன்னோடது. நீ எப்படி வேணா சம்பாதிக்கலாமே. கொள்ளையடிக்கச் சொல்லி நாங்க சொல்லலியே. கொள்ளையடிக்கறது உன் முடிவு. பாவம் எங்களுக்கெப்படி வரும்?
மொத்தமாய்க் குழம்பிப் போனான். இவ்வளவு நாள் இவர்களைக் காப்பாற்றுவதற்காக எவ்வளவு கொள்ளைகள், உயிர் பலிகள், கொலைகள்? பாவங்களை எப்படித் தொலைப்பது? பொருளில் பங்கு கொண்டவர்கள் பாவத்தில் பங்கு கொள்ள மாட்டார்களாமே.
யாரும் சிறு பங்குகூட வாங்கிக்கொள்ளவில்லையென்றால், அத்தனையும் நானே அனுபவிக்கணுமா?
பயந்துபோனான்.
ஓடோடி வந்தான்.
சாமி, சாமி, காப்பாத்துங்க..
என்னாச்சுப்பா?
எல்லாரும் பொருளில் தான் பங்கு கேக்கறாங்க. பாவத்தில் யாரும் பங்கு வாங்கிக்கமாட்டாங்களாம். இப்ப நான் என்ன செய்யறது?
ஒன்னும் புரியலையே. பாவத்தையெல்லாம் தொலைக்கறதுக்கு ஏதாச்சும் வழி சொல்லுங்க.
சிரித்தார் நாரதர்.
கனிவான பார்வையோடு அருகில் இருந்த நதியில் அவனை நீராடி வரச்சொன்னார்.
முங்கி எழுந்து வந்தவனின் வலது காதில் தாரக நாமமான ராம நாமத்தை உபதேசம் செய்தார்.
ஆனால், பாவம்..
இவ்வளவு நாட்களாக தரைக்கு மேலும் கீழுமாய் உலாவிக்கொண்டிருந்த அத்தனையையும் உண்டு அவன் நாவு தடித்துப் போயிருந்தது.
ராம என்ற இரண்டெழுத்துக்கள் அவனது நாவில் உச்சரிக்க வரவில்லை.
ஆம , வாம, காம
காமா சோமாவென்று என்னென்னமோ சொன்னான்.
நமது நாவிலிருந்து எப்படியாவது நாமத்தை வரவழைத்து விடுவதென்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைபவர்கள் ஸாதுக்கள்.
அரிசிவடாம் என்று சொல்லேன் என்று நந்தன் கெஞ்சுவானாம். உண்ணும் பொருளின் பெயர் என்றால் வாயில் வந்துவிடும் என்பது அவன் கணிப்பு. அரிசிவடாம் என்றால் அரி, சிவ என்று நாமம் வருமாம்.
பகவன் நாம போதேந்திரர்
வந்தாராம், போனாராம் என்று பேசிப் பழகுங்கள். ராம் ராம் என்று பேச்சினூடே வந்துவிடும் என்று சொல்கிறார்.
நம்மைக் கரையேற்றுவதில்தான் மஹான்களுக்கு எவ்வளவு முனைப்பு?
நாரதர் பார்த்தார். ரா ம இரண்டே எழுத்துக்கள். இவன் வாயில் வரவில்லையே. என்ன செய்யலாம்?
சற்று யோசித்தார்.
என்ன சாமீ?
என்னைக் காப்பாத்தறதுக்கு வழி தெரியலையா?
இந்த மரத்தடியில் உக்காருங்க. நான் போய் உங்களுக்கு சாப்பிட ஏதாவது பழம் பறிச்சிட்டு வர்ரேன்.
நாரதர் முகத்தில் ப்ரகாசம்..
இப்ப என்ன சொன்ன?
பழம் பறிச்சிட்டு வர்ரேன்னு...
அதுக்கு முன்னாடி
மரத்தடில உக்காருங்கன்னு..
ஆங்.. இதென்ன?
மரம்.
இன்னொரு முறை சொல்லு..
மரம் சாமீ..
அதே தான்..
நீ இங்கெயே உக்காந்து
மராமராமராமரா
ன்னு சொல்லிட்டேயிரு..
உன் பாவமெல்லாம் போயிடும்..
மெய்யாவா?
ஆமா..
சரி சாமி, நீங்க சொன்னபடியே செய்யறேன்...
ஒரு கேள்வியின்றி அப்படியே அந்த மரத்தின் கீழ் அமர்ந்தான் ரத்னாகரன்.
அப்போதுமுதல்
எழவில்லை
அசைவில்லை
கண்ணைத் திறந்து பார்க்கவில்லை
உணவில்லை
உறக்கமில்லை
எதிலும் கவனமும் இல்லை
மராமராமராமரா
அவனது மெல்லிய குரல் காடு முழுதும் எதிரொலிக்க ஆரம்பித்தது.
சிறிது காலம் கழித்து அவனைச் சுற்றிப் பெரிய கறையான் புற்று வளர்ந்துவிட்டது.
மிக மெல்லியதாக அவனது குரல் மட்டும் இரவு பகலின்றி இடையறாது ஒலித்துக்கொண்டே இருந்தது.
அந்தப் பக்கம் வந்த எதிரிகளாய் இருக்கும் மிருகங்களும் வேற்றுமை மறந்து அமைதியாய் சென்றன, விளையாடின.
ஒரு திருநாளில் அவருள்ளேயிருந்து ப்ரகாசிக்கும் ஞான ஓளியே அவரை எழுப்பிவிட்டது.
கறையான் புற்றிலிருந்து வெளிவந்தார் அவர். வடமொழியில் வன்மீகம் என்றால் கறையான் என்று பொருள். வன்மீகப் புற்றிலிருந்து வெளிவந்த அவரை உலகம் வால்மீகி என்று அழைத்தது.
பின்னாளில் அவரது குருவான நாரதரே மீண்டும் வந்து அவருக்கு ராமனின் குணங்களை விவரித்து சுருக்கமாக ராம சரித்திர த் தை யும் உபதேசித்து, ஞான த்ருஷ்டியையும் அருளினார்.
அப்போது ராமன் ராவணனை வென்று அயோத்தி திரும்பி பட்டாபிஷேகம் முடிந்திருந்தது.
அதன்படி வேடனாயிருந்த ரத்னாகரன், படிப்பறிவில்லாத தனாகரன், ராம சரித்திரம் முழுவதையும், ஞான த்ருஷ்டியால் தெரிந்துகொண்டு 24 அக்ஷரங்கள் கொண்ட காயத்ரி சந்தஸ் சில் 24000 ஸ்லோகங்களாக எழுதினார்.
அதை ராமனின் புதல்வர்களுக்கே உபதேசிக்கவும் செய்தார்.
உலகம் முழுதும் உள்ள அனைத்து மொழிகளிலும் ராம காதை மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
அதை எழுதியவர் குருவின் வாக்கின்படி ராம நாமத்தையே சொல்லி வால்மீகியாய் மாறிய ரத்னாகரன் ஆவார்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment