Wednesday, January 29, 2020

நாமம் ஒன்றே போதுமே.. - 15

பாறை உடைந்தது

தபோவனத்தில்‌ அருளே வடிவான ஸ்ரீ ஞானானந்தர் ஆசிரமத்தில் ஒருவர் சிலகாலம் தங்கியிருந்தார்.

ஒருநாள் சிலர் பதற்றத்துடன் ஓடிவந்தனர்.

புன்னகை தவழும் முகத்துடன் ஞானக்குழந்தை கேட்டது.

ஏனிந்தப் பதற்றம்?

பெண்ணையாத்தில ஸ்நானம் செய்யப் போனோம் ஸ்வாமி. 

நல்லதுதானே..

திடீர்னு ஆத்துல வெள்ளம் வந்துட்டது. எங்கள் குழந்தை வெள்ளத்தில் அடிச்சிட்டுப் போயிட்டது..

விழிகளை விரித்தார் ஞானத்தபோவனர்.

அடிச்சிட்டுப் போன குழந்தை ஒரு பாறை இடுக்கில் மாட்டிட்டிருக்கு. குழந்தையை எடுக்க முடியாம சிக்கிருக்கு ஸ்வாமி. இழுத்தா அடிபடுது. ஸ்வாமி ஏதாவது பண்ணணும்
என்று சொல்லி அழ ஆரம்பித்தார் குழந்தையின் தந்தை.

சற்று யோசித்த ஞானானந்தர்,

அதோ அங்கு அமர்ந்திருக்கிறாரே, அவர் மிகப் பெரியவர். அவரை அழைத்துக்கொண்டு போம். அவரால் முடியாததே இல்லை..

அங்கே தூரத்தில் அழுக்கு உடையோடு, தலையில் ஒரு பச்சைத் தலைப்பாகை, கொட்டாங்கச்சி, விசிறி சஹிதமாய் ஒருவர் இருந்தார்.

அனைவரும் சென்று அவரை வேண்டினர்.

அவர் திரும்பி ஞானானந்தரைப் பார்க்க, கண்கள் பேசின. ஞானக்குழந்தை சிரித்தது.

ஒன்றும் பேசாமல், அவர்களோடு சென்றார் அவர்.

ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. இறங்கினால் பிடிமானம் இன்றி அடித்துச் சென்றுவிடும். நீச்சல் தெரிந்தாலும், ஆற்றின் வேகத்திற்கு ஈடு கொடுப்பது கடினம். ஒரு பெரிய 
பாறையின் நடுவே இருந்த சிறிய பிளவுக்குள் எசகுபிசகாக சின்னஞ்சிறு குழந்தை மா ட் டி க் கொண்டிருந்தது. குழந்தையின் தாயும் இன்னும் சிலரும் அரற்றிக்கொண்டிருந்தனர்.

அழுக்கு உடையணிந்த அந்தப் பெரியவர் அந்தப் பாறையைப் பார்த்து

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம

என்று கர்ஜித்துக்கொண்டே  கையிலிருந்த விசிறியைப் பாறையை நோக்கி‌ ஆட்டினார்.

டமாரென்ற பெரிய சத்தத்துடன் வெடி வைத்துத் தகர்த்தாற்போல் பாறை வெடித்துச் சிதறியது. 

நாமம் சொன்னால் கலியே உடையுமெனில், பாறை எம்மாத்திரம்?

குழந்தை லட்டுபோல் பறந்துவந்து பெரியவரின் கைகளில்  விழுந்தது. சிறு கீரல் கூட இல்லாமல், அவ்வளவு நேரம் அழுததையும் மறந்து அவரைப் பார்த்துச் சிரித்தது..

நாமத்தினால் இப்பேர்ப்பட்ட அற்புதத்தை நிகழ்த்தியவர் பின்னாளில்  திருவண்ணாமலையிலேயே வாழ்ந்து பலரின் துன்பங்களைத் துடைத்த யோகி ராம்சூரத்குமார் ஆவார்.

அவரது மகிமையை உலகுகறியச் செய்த பெருமை ஞானக்குழந்தையான ஞானானந்தரையே சேரும்.

ஞானியரின் பெருமையை ஞானியரே அறிவர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...

No comments:

Post a Comment