Wednesday, January 29, 2020

நாமம் ஒன்றே போதுமே.. - 6

நாமம்‌ சொன்ன ராட்டி

ஜனாபாய் நாமதேவரின் வளர்ப்புப் பெண். இவள் மீரா, ஆண்டாள் இவர்களைப் போன்று விட்டலன் மீது மாறாக் காதல் கொண்டிருந்தாள்.

ஸந்த் நாமதேவரின் வீட்டில் எப்போதும் யாராவது ஸாதுக்கள் வந்துகொண்டேயிருப்பர். தினமும் ஓயாத வேலைகள் இருக்கும். விட்டல நாமத்தைப் பாடிக்கொண்டே எப்போதும் வேலை செய்துகொண்டேயிருப்பாள் ஜனா.

ஒரு சமயம் அவளுக்கும் பக்கத்து வீட்டுப் பெண்மணிக்கும் பெரிய வாய்ச்சண்டை வந்துவிட்டது.

பக்கத்து வீட்டுப் பெண்மணி ஜனாபாயைத் திருடி என்று ஏசிக்கொண்டிருந்தாள்.

சத்தம் கேட்டு நாமதேவர் வர, சிறிது சிறிதாக நிறைய பேர் வந்து விட்டார்கள்.

இருங்கம்மா, என்ன சண்டை?
பெண்களாக இருந்துகொண்டு இப்படி ஊருக்கே கேட்கும்படியா கத்துவார்கள்?

இந்த ஜனாபாய் பெரிய திருடி. அதை நான் கேக்கக்கூடாதா?

திரும்பி ஜனாபாயைப் பார்த்தார் நாமதேவர். அவளோ இல்லையென்று தலையசைத்தாள்.

அவள் திருடவெல்லாம் மாட்டாம்மா.

நீங்க உங்க வீட்டுப்பொண்ணு பக்கம் தான் பேசுவீங்க..

சரி, என்ன காணாமப் போச்சு, சொல்லு.

நேற்று நான் இந்தச் சுவத்துல தட்டி வெச்சிருந்த ராட்டியெல்லாம் அவ எடுத்து வெச்சுக்கிட்டா.

ஏம்மா சாணிக்கெல்லாமா சண்டை போடுவாங்க, விட்டலா..

ரெண்டு மணி நேரம் முதுகு ஒடிய தட்டின ராட்டிய விடமுடியுமா? ஏன் எடுத்தான்னு கேளுங்க..

ஏம்மா ஜனா, அது அவங்க தட்டினதுன்னு சொல்றாங்களே.

அப்பா, இதெல்லாம் நான் தட்டின ராட்டிதான். அவங்க ஏன் அப்படிச் சொல்றாங்கன்னு தெரியல
 என்றாள் ஜனா பரிதாபமாக.

ஏம்மா ஜனா தான் தட்டினதுதான்னு சொல்றாளே.

ராட்டில என்ன பேரா எழுதி வெச்சிருக்கு? அவ பொய் சொல்றா. எல்லாம்‌ என்னோடது..

நீங்க சொல்றதும் சரிதான். ராட்டியப் போய் எப்படி யார் தட்டினதுன்னு கண்டுபிடிக்கறது?

அப்பா, நான் தட்டின ராட்டியெல்லாம் விட்டல நாமம் சொல்லிக்கிட்டே தட்டினேன். எடுத்து காதுல வெச்சுப் பாருங்க...நாமம் கேக்கும்

என்னம்மா சொல்ற?
ராட்டி நாமா சொல்லுமா?

ஆமாப்பா, இதோ பாருங்க..
ஒரு ராட்டியை எடுத்து நாமதேவர் காதில் வைக்க அதிலிருந்து விட்டல விட்டல என்று மெல்லிய ஒலி கேட்டது.

ஆச்சரியம் தாங்காமல்  அங்கிருந்த அத்தனை ராட்டிகளையும் எடுத்து ஒவ்வொருவராய்க் காதில் வைத்துப் பார்க்க ஜனாபாய் வீட்டில் இருந்த எல்லா விரட்டிகளிலும் விட்டல நாமம் கேட்டது.

எனில், அவள் எப்படி நாமம் சொல்லியிருப்பாள்? எத்தனை முறை சொல்லியிருப்பாள். அவள் உடலில் எவ்வளவு நாமம் ஊறிப்போயிருந்தால் அவள் தொடும் பொருட்களிலெல்லாம் நாமம் வழிந்தோடும்..

ஒரே நாமத்தைத் தொடர்ந்து விடாமல் சொல்வதின் பயனைச் சொல்லில் அளக்க முடியுமா?

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில்‌ இவையும்‌ சிலவே..

No comments:

Post a Comment