Wednesday, January 29, 2020

நாமம் ஒன்றே போதுமே.. - 19

பாவனமாக்கும் நாமம்

பகவன் நாம போதேந்திரர் தனது குருவான ஆத்ம போதேந்திராளிடமிருந்து ஸந்யாஸம் வாங்கிக் கொண்டார். அவரது குருவான ஆத்ம போதேந்திரர் அவருக்கு, கலியுகத்தில் துன்புறும் மக்களை உத்தேசித்து நாம ஸித்தாந்தம் செய்யும்படி ஆணையிட்டார்.

அதற்கு ஆதாரமான பகவன் நாம கௌமுதி என்ற நூல் பூரி க்ஷேத்திரத்தில் லக்ஷ்மீதர கவி என்பவரிடம் இருப்பதை அறிந்தார் போதேந்திரர்.

அவரிடம் சென்று அந்த நூலைப் பெற்று அதில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களையும் ஆராய்ந்து அதன் பின்னர் குருவின் ஆணைப்படி  நாம‌ஸித்தாந்தம்‌ செய்ய எண்ணினார்.

எனவே பகவன் நாம போதேந்திரர் பூரி க்ஷேத்திரத்தை நோக்கி‌நடந்தார். அவர் லக்ஷ்மீதரகவியின் வீட்டை அடையும்போது இரவாகிவிட்டிருந்தது.

ஸந்யாஸியான தாம் இரவில் ஒரு இல்லறத்தார் வீட்டில்‌சென்று கதவைத் தட்டுவது சரியில்லை என்று நினைத்தார்.

எனவே, அவர்கள் வீட்டுத் திண்ணையிலேயே இரவைக் கழிக்க எண்ணி அமர்ந்து கொண்டார். 

சற்று நேரம் சென்றதும், ஒரு மனிதரும், வேற்று மதத்தைச் சேர்ந்தவர் போல் உடையணிந்த ஒரு  பெண்ணும் லக்ஷ்மீதர கவியின் வீட்டுக்கு வந்தனர்.

சாத்தியிருந்த கதவை அந்த நபர் தட்ட, ஒரு இளைஞன் வந்து கதவைத் திறந்தான்.

யார் நீங்கள்? என்ன‌வேண்டும்?
ஏதேனும்‌ உணவு வேண்டுமா? 

இல்லை ஐயா, 
பண்டிதர் இருக்காரா?

இல்லை. அப்பா வெளியூர் சென்றிருக்கிறார். உங்களுக்கு அப்பாவைத் தெரியுமா?

இல்லை ஐயா. நாங்கள் இருவரும் தென்னாட்டிலிருந்து  யாத்திரை செல்வதற்காக வந்தோம். சில மாதங்களுக்கு‌முன், நாங்கள் வேறொரு ஊரில் ஒரு சத்திரத்தில் தங்கியிருந்தோம். காலையில் எழுந்து பார்த்தபோது, என் மனைவியைக் காணவில்லை.

எங்கு தேடியும்‌ கிடைக்கவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் அலைந்துகொண்டிருந்தேன். இந்த ஊரில் என் மனைவி கிடைத்துவிட்டாள். ஆனால், வேற்று மதத்தவர்கள் இவளைக் கடத்திச் சென்று மதம் மாற்றி, இவளது புனிதத் தன்மையையும் கெடுத்து விட்டனர்.

ஆனால், இவளோ, என்னை எப்படியாவது ஊருக்கு அழைத்துச் செல்லுங்கள். வேலைக்காரியாகவாவது  இருக்கிறேன். என்னால் இங்கு இருக்கமுடியாது. தற்கொலை செய்துகொள்ளவும் சாஸ்திரம் அனுமதிக்கவில்லை.

என்று அழுகிறாள்.

இவள் மீது எனக்கு மிகுந்த அன்பு உண்டு.  இருந்தாலும் சாஸ்திர ரீதியாக ஏதாவது ப்ராயசித்தம் உண்டா? தீர்வு கிடைக்குமா என்று விசாரித்ததில்,  உங்கள் தந்தை பெரிய பண்டிதர் என்றும்,  எல்லா பிரச்சனைகளுக்கும் சாஸ்திர ரீதியாக தீர்வு சொல்வதில் வல்லவர் என்றும் அறிந்துகொண்டேன். தந்தை எப்போது வருவார்?

அவ்வளவுதானே? இதற்கு தந்தை எதற்கு? அவர் வர நான்கு நாட்களாகும். நானே தீர்வு சொல்வேனே.

தயவு செய்து ஒரு நல்ல தீர்வு  சொல்லுங்கள் ஐயா.. நானும் என் குடும்பமும் உங்களுக்கு ஏழேழு ஜென்மத்திற்கும் கடன் பட்டிருப்போம்.

பெரிதாக ஒன்றுமில்லை.
மூன்று முறை

ராம ராம ராம 

என்று இருவரும் சொல்லுங்கள்.

பிறகு 
வேலைக்காரியாகவெல்லாம் வேண்டாம். நீங்கள் முன்போல் கணவன் மனைவியாகவே வாழலாம். சாஸ்திரம் சொல்லும் தீர்வு இதுதான்.

சொல்லிக்கொண்டே இருக்கும்போது அந்த இளைஞனின் முதுகில் அடி விழுந்தது.

ஆ..

திரும்பிப் பார்த்தான்..அடித்தது அவனது தாயார்தான்.

ஏனம்மா அடிக்கிறீர்கள்? அப்பாவும் இப்படித்தானே சொல்வார்?

ராம நாமத்தை ஒரு முறை சொன்னாலே அத்தனை பாவங்களும் போய்விடுமே. நீ ஏன் மூன்று முறை சொல்லச் சொல்லி அதன் மரியாதையைக் குறைக்கிறாய்?

தெரியாமல் சொல்லிவிட்டேனம்மா.. மன்னித்து விடுங்கள்.

திண்ணையினுள் இருட்டில் அமர்ந்து‌ அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த போதேந்திராள் 
ராம ராம ராம
என்று கர்ஜனை செய்துகொண்டு வெளியே வந்தார்.

ஸந்யாஸியைக் கண்டதும் அனைவரும் விழுந்து வணங்கி அவருக்கு உபசாரங்கள் செய்தனர்.

போதேந்திராள் கேட்டார்.

ராம நாமம் எல்லா பாவங்களையும் போக்கிவிடும் என்றீர். அதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?

இருக்கிறது ஸ்வாமி. எங்கள் வீட்டில் பகவன் நாம கௌமுதி‌ என்ற புனித நூல் இருக்கிறது. நாமத்தின் பெருமையை எடுத்துரைப்பது. அதன்படியே தீர்வு சொல்லப்பட்டது.

அதை நான் பார்க்கலாமா?

தாராளமாக. ஆனால், ஒரே ஒரு ப்ரதி தான் இருக்கிறது. எனவே ஜாக்கிரதையாகப் பார்த்து விட்டுத் திருப்பித்தர வேண்டும்

கவலைப் படாதே. நான் இங்கேயே அமர்ந்து படித்துவிட்டுத் தந்துவிடுகிறேன்.

இளைஞன் உள்ளே‌சென்று பூஜையில்‌ வைக்கப்பட்டிருந்த ஒரு பழைய ஓலைச்சுவடிக்கட்டைக் கொண்டுவந்து கொடுத்தான்.

ஒரு எண்ணெய் விளக்கின் உதவியோடு இரவோடு இரவாக அங்கேயே அமர்ந்து அதை‌ முழுவதும் படித்தார் ஸந்யாசி.

பிறகு அந்த தம்பதிகளைப் பார்த்துச் சொன்னார்.

இவ்வளவு மகிமை வாய்ந்த நாமத்தின் பெருமையை உலகறியச் செய்யவேண்டும். எனவே, நீங்கள் இருவரும் நாளை காலையில் கோவிலின் அருகே இருக்கும் குளத்திற்கு வாருங்கள்.

ஊரிலுள்ளோர் யாவரையும் அங்கு கூடச்சொல்லி தண்டோரா போடச்சொல்லி ஏற்பாடு செய்கிறேன். 
காலை சந்திப்போம்.

ராம ராம ராம

என்று கூறியபடி பகவன் நாம போதேந்திரர் ஓலைச்சுவடியைத் திருப்பிக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டார்.

மறுநாள் காலை தண்டோரா போடப்பட்டு ஊர் மக்கள் அனைவரும் குளக்கரையில் கூடினர்.

அப்போது அங்கு வந்த போதேந்திராள் அந்த தம்பதிகள் இருவரையும் ஒரு கோலின் இரு நுனிகளையும் பிடித்துக்கொண்டு 
ராம ராம ராம என்று சொல்லி குளத்தில் மூழ்கி எழச் சொன்னார்.

அவர்களும் அவ்வாறே நாமம் சொல்லிக் கொண்டு குளத்தில் மூழ்கினர்.

எழும்போது..

ஆஹா..

என்னே அற்புதம்!
வேற்று மதத்தைச் சேர்ந்தவர் போல் இருந்த அந்தப் பெண், குளத்திலிருந்து எழும்போது கணவன் கையைப் பிடித்துக்கொண்டு, தென்னாட்டைச் சேர்ந்த சுமங்கலியாக நீருக்குள்ளிருந்து எழுந்தாள். 

இதென்ன விந்தை..
உளமார ராமநாமத்தைச் சொல்லி மூழ்கி எழுந்தவள், தொலைந்த அன்று எப்படி இருந்தாளோ, அதேபோல், நெற்றி நிறைய குங்குமமும், கழுத்தில் திருமாங்கல்யமும், தலையில் பூக்களும், தென்னாட்டு உடையுடனுமாக மாறிவிட்டிருந்தாள்.

அகல்யையைக் கரையேற்ற ராமனின் கால்தூசி வேண்டியிருந்தது. ஆனால், கலியுகத்திலோ, அறிந்தும் அறியாமலும் செய்யப்படும் பாவங்களைப் போக்கி நம்மைப் பாவனமாக்க அந்த ராமனின் நாமமே போதுமாயிருக்கிறது.

இந்த நிகழ்வு கொடுத்த உற்சாகத்தில் போதேந்திராள் தமிழ் நாட்டிற்குத் திரும்பி நாம ஸித்தாந்தம் செய்து, அதற்கு ஆதாரமாக எட்டு கிரந்தங்கள் எழுதியுள்ளார்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..


No comments:

Post a Comment