நாமா சொன்னால் போதுமா?
அக்பர் பீர்பாலிடம் ஒரு மந்திரி என்பதைத் தாண்டி மிகவும் நட்போடு பழகுவார். காரணம், தனது சமயோசித புத்தியால் பீர்பால் எல்லோரும் ஏற்கக்கூடிய வகையில் ப்ரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடியவர். அவரது பேச்சு சாமர்த்தியத்தில் மயங்கியிருந்த அக்பர், பீர்பாலை எப்போதும் தன்னுடனேயே வைத்துக்கொள்ள விரும்புவார். ஏதாவது சிக்கலான கேள்விகளைக் கேட்டு, பீர்பால் பதில் சொல்லும் அழகையும் ரசிப்பார்.
ஒருநாள் அக்பர் அதிகாலையிலேயே வேட்டைக்குக் கிளம்பினார். பீர்பாலைத் தன்னோடு வரும்படி வற்புறுத்தினார். பீர்பாலோ, தனக்கு வேட்டையில் விருப்பமில்லை, எனவே வர இயலாதென்று சொல்லிப் பார்த்தார்.
அரசகட்டளை, வந்தே ஆகவேண்டும் என்று சொன்னதால், மனமின்றி அக்பருடன் கிளம்பினார் பீர்பால்.
இருவரும், படை வீரர்களோடு வேட்டைக்குக் கிளம்பினார்கள். வெகு நேரமாயிற்று. அன்றைக்கென்று ஒரு விலங்கும் தென்படவில்லை. படைகள் வேறு திக்கில் மாட்டிக்கொண்டன. அக்பரும் பீர்பாலும் படைகளை விட்டுப் பிரிந்து தனியாக வெகுதூரம் சென்று விட்டனர். உச்சி வேளை கடந்துவிட்டது.
பசியும், தாகமும் இருவரையும் வாட்டியெடுத்தது.
அக்பர்,
பீர்பல், ரொம்ப பசிக்கிறது. வா, இங்கே எங்கேயாவது மக்கள் வாழும் பகுதி இருக்கும். சென்று உணவு கேட்கலாம்
நான் வரவில்லை மன்னா.
ஏன்?
அதிகாலையிலேயே என்னைக் கட்டாயப்படுத்தி வேட்டைக்கு அழைத்து வந்துவிட்டீர். எனது இன்றைய ஜபத்தை நான் முடிக்கவில்லை. ஜபத்தை முடிக்காமல் எதுவும் உண்ணமாட்டேன்.
உங்களுக்குப் பசித்தால் நீங்கள் போய்க் கேட்டு வாங்கி உண்ணுங்கள்
நீ இந்தக் காட்டில் தனியாக என்ன செய்யப் போகிறாய்?
நான் இங்கேயே இந்த மரத்தடியிலேயே அமர்ந்து எனது இன்றைய ராமநாம ஜபத்தை முடித்துவிட்டு வருகிறேன்.
பீர்பல், நான் சொல்வதைக் கேள். காலையிலிருந்து அலைந்திருக்கிறோம். உன் முகத்தைப் பார்த்தாலே களைப்பாயிருக்கிறாய் என்று நன்றாகத் தெரிகிறது. மயங்கி விழுந்துவிடப்போகிறாய். ஏதாவது துஷ்ட மிருகங்கள் உன்னைக் கடித்துவிடும். ராமநாமத்தைச் சொல்லிக் கொண்டிருந்தால் உணவு கிட்டுமா என்ன? உழைத்தால் தான் உணவு. எழுந்து வா
பரவாயில்லை அரசே, நான் வருவதாக இல்லை..
என்னவோ செய். நான் சொல்லிவிட்டேன். எனக்குப் பசிக்கிறது. நான் போய் உணவு தேடத்தான் போகிறேன். பிறகு, அரசன் கூப்பிடாமல் தான் மட்டும் உண்டான் என்று என்னைக் குறை சொல்லக்கூடாது.
சொல்லிவிட்டு அக்பர் புறப்பட்டார்.
பீர்பால் அங்கிருந்த மரத்தினடியில் அமர்ந்து ராமநாமத்தை ஜபம்செய்யத் துவங்கினார்.
அக்பர் சிறிது தூரம் சென்றதும் சற்று தொலைவில் ஆகாயத்தில் புகை வருவதைப் பார்த்து அந்த திசையில் சென்றார். அங்கு சில குடிசைகள் இருந்தன. ஒரு குடிசையினுள் நுழைந்த அக்பர், அங்கு ஒரு கிழவியைக் கண்டார்.
அவளிடம் தன்னைப் பற்றிச் சொல்லி, ஏதேனும் உணவு கிடைக்குமா என்று கேட்க, கிழவி நாட்டின் அரசனே தன் குடிசைக்கு வந்ததை எண்ணி மகிழ்ந்தாள். அவரை உபசரித்து, அவருக்கு நிறைய கிழங்குகளும் கொஞ்சம் தினை மாவு, கோதுமைச் சோறு போன்றவற்றைக்கொடுத்தாள்.
வகை வகையான உணவுகளை உண்டு பழக்கப்படிருந்தாலும், பசியின் மிகுதியால் கிழவி கொடுத்த எளிமையான உணவை விரும்பி உண்டார் அக்பர்.
நன்றி சொல்லிவிட்டு, தான் அணிந்திருந்த சில நகைகளைப் பரிசாகக் கொடுத்துவிட்டு கிளம்பிய அக்பருக்கு பீர்பாலின் நினைவு வந்தது.
பாவம், நான் அழைத்தேன் என்பதற்காக விருப்பமில்லாவிடிலும், உடன் வந்துவிட்டார். அவருக்கும் பசிதான். என்னவோ பைத்தியக்காரத்தனமாய் ஜபம், த்யானம் என்று சொல்லிக்கொண்டு வீணாய்ப் பட்டினி கிடக்கிறானே.
பாட்டி, என்னோடு வந்த ஒருவர், சற்று தூரத்தில் இருக்கிறார். அவருக்காக ஏதாவது சாப்பிடக் கொடுக்க முடியுமா?
தாராளமா தரேனுங்க. ராசா கேட்டு இல்லன்னு சொல்வாங்களா?
என்று அக்பருக்குக் கொடுத்த அதே உணவு வகைகளை இலைகளில் கட்டிக் கொடுத்தாள்.
அதை வாங்கிக் கொண்டு பீர்பாலிடம் திரும்பி வந்த அக்பர்,
என்ன உன் ஜபம் முடிந்ததா?
ஆயிற்று மஹராஜ்!
உணவு ஏதேனும் கிடைத்ததா?
இல்லை மஹராஜ்!
தேடவில்லையா?
நீங்கள் திரும்பிவந்து என்னைத் தேடுவீர்களே என்று இங்கேயே இருக்கிறேன்.
ஓஹோ!
சரி, இந்தா சாப்பிடு.
புன்முறுவல் பூத்த பீர்பால் உணவை வாங்கி வேகவேகமாக சாப்பிட்டார்.
அவர் உண்டுமுடித்ததும் அக்பர் சொன்னார்,
நன்றாய்த் தெரிந்துகொள் பீர்பல், நீ ஜபிக்கும் மந்திரம் உனக்கு உணவு தரவில்லை. நான் தான் போனால் போகிறதென்று உனக்கு வாங்கி வந்தேன்.
பீர்பால் கடகடவென்று சிரித்தார்.
என்ன சிரிப்பு?
மஹராஜ், உங்களுக்கு உணவை யார் கொடுத்தார்கள்?
சற்று தொலைவில் உள்ள குடிசையில் ஒரு கிழவி இருந்தாள்.
அவளிடம் உணவு கொடு என்று கேட்டீர்களா?
ஆம். நாட்டின் அரசன் நான். கேட்டால் கொடுக்க மாட்டாளா?
எனில் எனக்கு எப்படி உணவு வந்தது?
நான்தான் அவளிடம் கேட்டு வாங்கி வந்தேன்.
அரசே, நான் ஓரமாக அமர்ந்து எனது இன்றைய ஜபத்தைச் செய்தேன். நாம நாமத்தின் மஹிமையால், நாட்டின் அரசனே எனக்காக உணவைப் பிச்சை கேட்டு வாங்கி வந்து விட்டார்.
வழிபாட்டை விடுத்துச் செய்யும் எந்தக் காரியமும் முழுமையடைவதில்லை அரசே..
பீர்பலின் சாதுர்யமான பேச்சை எண்ணி வாயடைத்துப் போனார் அக்பர்.
அதற்குள் படை வீரர்கள் இருவரையும் தேடிக்கொண்டு வந்துவிட, அனைவரும் நாட்டுக்குத் திரும்பினர்.
நாமத்தைச் சொல்லிக் கொண்டு உழைப்பதால், பயன் பன்மடங்காகிறது..
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாஸங்களில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
No comments:
Post a Comment