அறியாமலே சொன்ன நாமம்
தாய் தந்தையரை இழந்த ஒரு சிறுவன் இருந்தான். அவனுக்குப் பார்வையும் இல்லை. அவனது உறவினர்கள் அவனை பாரமாக நினைத்து அடித்து விரட்டிவிட்டனர்.
அவன் அழுதுகொண்டே கால் போனபோக்கில் சென்றுகொண்டிருந்தவன், பக்கத்தில் இருந்த காட்டிற்குள் நுழைந்துவிட்டான். கண் தெரியவில்லையே தவிர, பழக்கத்தினால் ஒரு குச்சியை வைத்துக்கொண்டு நடந்து செல்வான்.
கண் தெரியாததால் காட்டில் தனியாக இருப்பதும் அவனுக்கு பயமாக இல்லை.
எப்படியோ ஒரு கொட்டாங்கச்சியைக் கண்டுபிடித்து அதில் குச்சி, நாண் எல்லாம் வைத்துக்கட்டி இசைக்கத் துவங்கினான்.
காலையில் மெதுவாகக் கிளம்பி அருகிலுள்ள கிராமத்திற்குச் செல்வான். எங்கேயோ எப்போதோ கேட்ட ஒரு நாமாவளி அவன் நினைவில் இருந்தது.
க்ருஷ்ணா கோவிந்தா முராரே என்று பாடிக்கொண்டே வீடு வீடாகச் சென்று பிச்சையெடுத்து வயிற்றைக் கழுவிக் கொண்டான். வேண்டியது கிடைத்ததும் திரும்பிக் காட்டுக்கே வந்துவிடுவான். கண்ணும் தெரிடவில்லை. பொழுது போகவேண்டாமா?
அவனுக்குத் தெரிந்த அந்த ஒரே நாமாவளியையே விதம் விதமாகப் பாடிக்கொண்டிருப்பான். பகவன் நாமத்தைப் பாடிப் பாடி அவனுக்கு நல்ல குரல் வளமும் வந்துவிட்டது. இப்படியாக அவன் காலம் உருண்டோடியது. வயதும் ஏறிக்கொண்டேயிருந்தது. பெருமை அறியாமல் சொன்னபோதும், நாமத்தினால் முகத்தில் ஒரு தேஜஸும் வந்துவிட்டது.
ஒரு நாள் சில வீரர்கள் அங்கு வந்தனர். அவர்கள் இவரையும் இவரது ஒளி பொருந்திய முகத்தையும் பார்த்ததும் விழுந்து வணங்கினர்.
யாரோ எதிரே நிற்கிறார்கள் என்று உணர்ந்ததும் பழக்கத்தினால், க்ருஷ்ணா என்றார்.
ஸ்வாமி எங்களைக் காப்பாத்துங்க..
ஏம்பா, என்னைக் காப்பாத்தவே யாருமில்லன்னு நானே காட்டில் வந்து உக்காந்திருக்கேன். நான் எப்படி உங்களைக் காப்பாத்தறது?
ஸ்வாமி, நீங்க அப்படிச் சொல்லக்கூடாது. நாங்க பெரிய ஆபத்தில் இருக்கோம். உங்களை விட்டா வேற வழி இல்லை.
என்ன ஆபத்து?
ஸ்வாமி, நாங்க ராஜாகிட்ட வேலை பார்க்கறோம். ராஜா ரொம்ப ஆசையா ஒரு அரபுக் குதிரையை வளர்த்தார். அந்தக் குதிரை எங்க பொறுப்பில் இருந்தது. திடீர்னு இன்னிக்கு காலைல அந்தக் குதிரை காணாமப் போச்சுது. அந்தக் குதிரையை இரவுக்குள் தேடிக்கண்டுபிடிச்சுக் கொண்டு வரலன்னா எங்க ரெங்க ரெண்டு பேர் தலையையும் வாங்கிடுவேன்னு உத்தரவு போட்டிருக்கார். நீங்கதான் காப்பாத்தணும்.
அதுக்கு நான் என்ன பண்ணமுடியும்?
ஸ்வாமி, நாங்களும் காலைலேர்ந்து தேடிட்டோம். குதிரையைக் கண்டுபிடிக்கமுடியல. நீங்க உங்க ஞான த்ருஷ்டியில் பார்த்துச் சொன்னா எங்க உயிர் தப்பிக்கும்.
சிரித்தார். ஏம்பா, எனக்கு ஊன த்ருஷ்டியே இல்லை. ஞான த்ருஷ்டிக்கு எங்க போவேன்?
ஸ்வாமி, நீங்க அப்படிச் சொல்லக்கூடாது. எப்படியாச்சும் சொல்லுங்க. உங்களைப் பார்த்தாலே நீங்க பெரிய தபஸ்வின்னு தெரியுது.
இதென்னடா வம்பாப் போச்சு?
தவித்தார் அவர். இருவரும் விடுவதாய் இல்லை. அவர்களிடமிருந்து விடுபட்டால் போதும். எதையாவது சொல்லி அனுப்பிவிடுவோம் என்று,
சரி, இங்கேயிருந்து நேரா கிழக்கால போங்க, அங்க ஒரு ஆலமரம் இருக்கும். அப்புறம் திரும்பி வடக்கே போனால், ஒரு குளம் வரும். குளக்கரையில் வேப்பமரம் இருக்கும். அதன் கிளையில் ஒரு காக்கா இருக்கும். அந்தக் காக்கா பறக்கும் திசையில் தொடர்ந்துபோனா, உங்க குதிரை கிடைக்கும்
என்று வாயில் வந்ததையெல்லாம் சொன்னார்.
அவர்களும் சரி ஸ்வாமி, மிக்க நன்றி என்று சொல்லிவிட்டு வணங்கிச் சென்றனர்.
அவர் சொன்னதையே வாய்ப்பாடு மாதிரி சொல்லிக்கொண்டு அதே வழியில் சென்றனர். பார்த்தால் ஆச்சரியம் தாங்கவில்லை. நிஜமாகவே காகம் பறந்த திசையில் சென்றபோது குதிரை மேய்ந்து கொண்டிருந்தது.
மறுபடி அவரைத் தேடிச் செல்ல நேரமின்றி இரவுக்குள் அரசவைக்குப் போகலாம் என்று குதிரையை அழைத்துக்கொண்டு அரசனிடம் போனார்கள்.
குதிரை திரும்பக் கிடைத்ததற்கு மிகவும் மகிழ்ந்தான் அரசன்.
எப்படிக் கிடைத்தது?
ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
ஒழுங்காக உண்மையைச் சொல்லுங்கள்.
நீங்களே திருடி விற்கத் துணிந்தீரோ? தண்டனைக்கு பயந்து திரும்பிக் கொண்டுவந்தீரா?
இல்லை இல்லை அரசே..
என்று காட்டில் நடந்த விவரங்களைச் சொன்னார்கள்.
அரசனுக்கு மிகவும் ஆச்சரியம்.
நம்எல்லைக்குட்பட்ட காட்டில் இப்படி ஒரு மஹான் இருக்கிறார் என்றால் நாம் அவசியம் அவரை தரிசிக்க வேண்டும்.
சரி, நாளைக் காலை என்னை அவரிடம் அழைத்துச் செல்லுங்கள் என்றான் அரசன்.
மறுநாள் காலை வீரர்களோடு, அரசரும், பெரிய பரிவாரத்துடனும், வெகுமதிகளோஒடும் இந்தக் கண் தெரியதவர் முன் வந்தி நின்றனர்.
பயந்துபோனார் அவர்.
அரசன் அவரை விழுந்து விழுந்து வணங்கி குதிரை கிடைத்துவிட்டதையும் சொன்னதும்தான் அவருக்குச் சற்று நிம்மதியாயிற்று.
அவரை வற்புறுத்தித் தன்னுடனேயே அரண்மனையில் சிலகாலம் தங்குமாறு அழைத்துச் சென்றான்.
கூனிக் குறுகிப்போனார் அவர். வாயில் வந்ததையெல்லாம் சொன்னதே பலித்துவிட்டதா?
இத்தகைய வாக்சித்தி எப்படி வந்தது?
வயிற்றுப் பிழைப்பிற்காகவும், பொழுதைப் போக்குவதற்காகவும் உன் நாமத்தைச் சொன்னதற்கே இவ்வளவு பலனா?
நிஜமாக உணர்ந்து சொன்னால்?
அழுதார்.
சிலநாட்கள் அரண்மனையில் இருந்துவிட்டு மன்னனிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பி க்ருஷ்ணநாமத்தை உருகி உருகிப் பாடிக்கொண்டு அவர் வீதியில் நடந்தபோது, ஸ்ரீ வல்லபாசாரியார் அவரைத் தடுத்தாட்கொண்டு, க்ருஷ்ண மந்திரத்தை உபதேசம் செய்து, அவரது பூஜா மூர்த்தியான ஸ்ரீ நாத்ஜிக்கு தினமும் இரவு டோலோத்ஸவத்தில் பாடும் கைங்கர்யத்தைக் கொடுத்தார்.
கண் தெரியாத அந்த மஹான் சூர்தாஸர் ஆவார்.
அவர் பாடும்பொழுது கண்ணன் அவர் எதிரில் அமர்ந்து அவரது பாடல்களை ரசித்துக் கேட்பான்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment