Wednesday, January 29, 2020

நாமம் ஒன்றே போதுமே.. - 11

அந்திம நேரத்தில் சொன்ன நாமம் - 3
எமதூதர்களைப் பார்த்து பயந்துபோன அஜாமிளன் நாராயணா என்று மகனை அழைத்தான். விஷ்ணுவின் பார்ஷதர்களால் காப்பாற்றப்பட்டான்..

செய்கிற பாவத்தையெல்லாம் செய்துவிட்டு மரணத் தருவாயில் நாமம் சொன்னால் பாவங்கள் அழிந்துபோய் வைகுண்டம் கிட்டுமா? இது தெரிந்தால் எல்லோரும் இப்படிச் செய்வார்களே என்றான் எமதூதன்..

நமக்கும் இது ரொம்ப சுலபமாகத் தெரிகிறதே...
ஆனால்..
அவ்வளவு சுலபமா என்ன?

மேலும் இன்னொரு சந்தேகமும் வருகிறது..
மகனைத் தானே அழைத்தான்..
பகவானை நினைந்தா அழைத்தான்?

தர்மராஜன் சிரித்துக் கொண்டே  சொன்னார்..

கவலையே படவேண்டாம்.. உலகம் முழுதும் இந்தக் கதை தெரிந்தாலும், உயிரை எடுக்கும் அதிகாரியான நானே,

"நாமம் சொன்னால் யமலோகத்திற்கு வரவேண்டாம்"

என்று சாசனமே எழுதிக் கொடுத்தாலும்,
ஒன்றும் நடக்காது..

ஏன் ஸ்வாமி?

இது மிகவும் சுலபமானது என்பதாலேயே மக்களுக்கு அதில் ஒரு அலட்சியம் இருக்கும். ஏதோ பெரிதாய் சாதனை செய்தால் மட்டுமே இறைவனை அடைய முடியும் என்று மடத்தனமாக அவர்களது தனிப்பட்ட முயற்சியை நம்பி, ஏதேதோ செய்வார்கள். மேலும், எதை செய்தாலும் இறைவனின் கருணையாலேயே அவரது பதம் கிடைக்கும் என்பதை அறியாமல் தப்பும் தவறுமாகக் காரியங்களைச் செய்பவர்களே அதிகம்.. எனவே, நமக்கு கை ஓயாமல் வேலை இருக்கும்..

மேலும் அஜாமிளன் மகனைத்தான்
அழைத்தான் என்றாலும், நாராயணன் என்பது பகவானின் பெயர். அதைத் தான் அறியாமலே மகனுக்கு வைத்தான்.

மகன் கேட்காவிட்டாலும்  பெயருக்கு உண்மையான உரிமையாளன் ஓடி வருவான்.

என்றார்..

யார் நமது பாவ புண்ணியங்களை விசாரித்து தண்டனையோ, ஸ்வர்கமோ, வழங்குவாரோ அவரே எழுதிய தீர்ப்பு...

ஸ்ரீ மத் பாகவதத்தில் நடு நாயகமாக நாம வைபவத்தைச் சொல்லும் விதமாக ஆறாம் ஸ்கந்தத்தில் கூறப்படுகிறது இந்த கதை.

ஒரு பாகவத ப்ரவசனத்தில் இதை ஒரு முதியவர் கேட்டார்..

அவருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.. 
ஆஹா.. இவ்வளவு நாளாத் தெரியாம போச்சே.. வைகுண்டம் போறது அவ்ளோ சுலபமா?

எண்ணிக்கொண்டே வீட்டினுள் நுழைந்தவர் வீட்டிலுள்ள அனைவரையும் அழைத்தார். அவருக்கு நான்கு மகன்கள்.

முதல் மகனைக் கூப்பிட்டு 
இன்னிலேர்ந்து உன் பேர் நாராயணன்..

இரண்டாவது மகனை அழைத்தார்

இன்னிலேர்ந்து உன் பேர் ஹரி

மூன்றாமவனிடம் 
இன்னிலேர்ந்து உன் பேர் ராமன்

கடைசியாய்ப் பிறந்த செல்ல மகனை அழைத்து
இன்னிலேர்ந்து உன் பேர் க்ருஷ்ணன்

என்னாச்சும்மா அப்பாவுக்கு?

ஒன்னும் பேசாத.. எல்லாருக்கும் பேர் மாத்தியாச்சு. எனக்கு வயசாயிட்டே போவுது.. நான் கடைசி சுவாசம் வாங்கும்போது

அப்பா..

சும்மா இரு. நான் சொல்றதை பொறுமையா கேளு
எனக்கு கடைசி சுவாசம் வாங்கும்போது,

மனைவியைப் பார்த்து,

ஒவ்வொருத்தனையா என் முன்னால் கொண்டு வந்து நிறுத்தி, இவன் பேர் என்னன்னு கேக்கணும் சரியா? 
என்று மிரட்டினார்.

ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை..

அம்மா, கோவில் குளம்னு போனா புத்தி சரியாகும்னு பேரு. அப்பா இப்படி  பேசறாரே..

ஒருநாள் அவருக்கும் அந்திம காலம் வந்தது.

மேல் சுவாசம் வாங்க ஆடம்பித்தார்.

மனைவிக்கு திடீரென்று ஒருநாள் இவர் ஏதோ சொன்னாரே என்று நினைவு வந்து, மூத்த மகனை அழைத்து வந்து அவர் முன் நிறுத்தினாள்.

இவன் யார் தெரியுதா? இவன் பேரென்ன சொல்லுங்க...

இ.. வ.. னா.. 
என்.. மு..தல்.. பை..யன்..

இரண்டாவது மகனை அழைத்தாள்
இவன் யாரு?

இ..வன்.. ரெண்..டா...வ..து.‌. பை.யன்..

மூன்றாமவன் வந்தான்

இவனைப் பாருங்க..
இ..வன்.. மூ...ணா..வ..தா. பொ.. றந்..தவன்.

சரியாச் சொல்றீங்களே..
இப்ப இவன் யார் சொல்லுங்க..
கடைசி மகனை கண் முன் நிறுத்தினாள்.

இ..வ.. னா.. 
இ.. வ.. னா..
கடைக் குட்டி..
அவசரமாகச் சொல்லிட்டுக் கண்ணை மூடினார் கிழவர்..

அவ்வளவு சுலபமாக மரணத் தருவாயில் இறைவன் பெயர் வந்துவிடுமா என்ன?

அஜாமிளன் மகனுக்குப் பெயரிட்டுவிட்டு சும்மா இருந்தானா..

நின்றாலும், நடந்தாலும், அமர்ந்தாலும், எழுந்தாலும், பசித்தாலும், புசித்தாலும்
அறியாமலே நாராயணா நாராயணா என்று சொல்லிப் பழகியிருந்தானே..

எனவே, இறக்கும் தருவாயில் அவன் அறியாமலே நாமம் வாயில் வந்துவிட்டது..

குழந்தைகளுக்கு இறைவனின் பெயரை வைப்பதே அழைத்து அழைத்து இறை நாமத்தில் நாவைப் பழக்கத்தானே..

ஒரு முறை தொட்டாலும்
அறியாமல் தொட்டாலும்,
யார் தொட்டாலும்,  நெருப்பு சுடுவது போலவே, இறை நாமம் ஒரு முறை சொல்பவரின் பாவங்களை அழிக்கிறது..

ஆனால் ஒரே ஒரு முறை இறை நாமம் சொல்வதற்கே பலகோடி ஜென்மாக்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்கிறார் பகவன் நாம போதேந்திராள்..

எனவே...

ராம நாமம் சொல்லிப் பழகு..
ஆனந்தத்தை அள்ளிப் பருகு
நாணமின்றி சொல்லிப் பழகு - ஆக்கை விடும் முன்னே பாடிப் பழகு
நாவே இது உனக்கழகு

என்று மதுரகீதம் பாடுகிறார் ஸத்குருநாதர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...

No comments:

Post a Comment