Wednesday, January 29, 2020

நாமம் ஒன்றே போதுமே.. - 12

ராம யோகி

கோபன்னா என்பவர் சிறந்த ராம பக்தர். மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். வருடாவருடம் ஸ்ரீ ராம நவமியை மிக விமரிசையாகக் கொண்டாடுவார்.

கோபன்னா நடத்தும் ஸ்ரீ ராம‌நவமி உற்சவம் என்றால் ஏராளமான பாகவதர்கள்‌ வந்துவிடுவர். பத்து நாள்களுக்கு இரவு பகல்‌ பாராமல் பஜனை நடந்துகொண்டே யிருக்கும். வருபவர்கள்‌ அனைவருக்கும் உணவுப் பந்தி நடந்துகொண்டே இருக்கும்.
கோபன்னாவுக்கேற்ற குணவதி அவர் மனைவி. 

ஒரு சமயம் ஸ்ரீ ராம நவமி உற்சவத்தில் காலை பஜனை நடந்து கொண்டிருந்த சமயம்.

அன்னத்தை வடித்து வடித்து சமையலறையில் உள்ள முற்றத்தில் ஒரு தொட்டியில் கொட்டி வைப்பது வழக்கம்.

உறங்கிக்  கொண்டிருந்த ஒன்றரை வயதுக் குழந்தையை ஓரமாக சமையலறையிலேயே விட்டிருந்தாள் 
கோபன்னாவின் மனைவி. நைவேத்ய சமயம் வந்துவிட்டதா என்று பார்க்க கூடத்திற்குச் சென்றார். மிக உற்சாகமாக பஜனை நடந்து கொண்டிருந்தது. தன்னை மறந்து சிறிது நேரம் அங்கேயே ஓரமாக நின்றுவிட்டார். 

சற்று நேரத்தில் நைவேத்யம் கொண்டு வா என்று கோபன்னா சைகை காட்ட உள்ளே வந்தார்.

நைவேத்யத்தை எடுக்கும் சமயம் 'சொரேல்' என்று உரைத்தது. உறங்கிக்கொண்டிருந்த இடத்தில் குழந்தையைக் காணவில்லை. 
பதறிப் போய்த் தேடினாள்.

குழந்தை தவழ்ந்த அடையாளம் கஞ்சித் தொட்டியின் அருகே தெரிந்தது. 

அங்கே.. கஞ்சித்தொட்டியினுள்.. 
கொதிக்கும் கஞ்சிக்குள்..
மிதந்துகொண்டிருந்தது..

குழந்தை..
குழந்தையேதான்..

மயக்கமடைந்து விழுந்தாள்.

நைவேத்யம் கொண்டுவரப் போனவளை வெகு நேரமாய்க் காணோமே என்று கோபன்னா தானே தேடிக்கொண்டு வந்தார்.

மனைவி கீழே விழுந்திருப்பதைப் பார்த்து நீர் தெளித்து மயக்கம் தெளிவித்தார்.

என்னாச்சும்மா?

பசி மயக்கமா?

இதோ நைவேத்யம் ஆயிடும். பாகவதா சாப்பிட்டா சாப்பிடலாமே..

இ..ல்ல..

என்ன? ஏன் அழற?

கு..ழந்..தை..

குழந்தைக்கென்ன?

அவன் இங்கதான் எங்கயாவது விளையாடிண்டிருப்பான். நேரமாச்சும்மா. நைவேத்யம் எடு.. ராமர் காத்துண்டிருக்கார்.. பாகவதாளுக்கும் பசிக்கும். காலைலேர்ந்து பாடறா‌ எல்லாரும்..

கு.. ழந்.. தை.

குழந்தைக்கென்னாச்சு?

அங்க..கையை நீட்டிய இடத்தில் கஞ்சித் தொட்டிக்குள் மி தந்து கொண்டிருந்த குழந்தையைப் பார்த்ததும் அதிர்ந்து போனார்.

ஒன்றுமே புரியவில்லை.

கணவனும் மனைவியும்‌ ப்ரமை பிடித்தாற்போல் சற்று நேரம் நின்றனர்.

மெதுவாக கொதிக்கும் கஞ்சியிலிருந்து குழந்தையின் உடலை எடுத்து வாழை இலையில் வைத்தார்.

ஒரு முடிவுக்கு வந்தவராக 
கண்ணைத் துடைத்துக் கொண்டு இன்னும் பத்து வாழை இலைகளை வைத்து ஒரு சாக்கில் குழந்தையின் உடலைச் சுற்றி ஓரமாக வைத்தார்.

நம்ம துக்கம் நம்மோடு போகட்டும். பாகவதா சாப்பிடும் வரை குழந்தை போனதை மூச்சு விடக்கூடாது. கண்ணைத் துடை..

எப்படி? எப்படி முடியும்? போனது நம்ம குழந்தையாச்சே..

அவன் நம்ம குழந்தை இல்ல. ராமனோட குழந்தை. ராமன் தான் கொடுத்தான். அவனே எடுத்துண்டாச்சு..

இப்ப குழந்தை போனதை சொன்னா யாரும் சாப்பிடமாட்டா. எல்லாரும் இவ்ளோ நேரம் பாடியிருக்கா. பேசாம வா..
மனைவியை மிரட்டினார்.

இருவரும் பஜனை நடக்கும் கூடத்துக்குப் போனார்கள்.

அப்போது ஒரு பாகவதர், 

கோபன்னா, தீபாராதனை சமயம்.. குழந்தையைக் கூப்பிடுங்கோளேன்..

அவன் தூங்கறான்.

பரவால்ல தூக்கிண்டு வாங்கோ..

என்று இன்னொருவர் சொல்ல, அதற்குமேல் தாங்கமாட்டாமல், கோபன்னாவின் மனைவி கதறினாள்.

என்னாச்சு? என்னாச்சு?
எல்லாரும் பதற, கோபன்னா ஒருவாறு தயங்கித் தயங்கி விஷயத்தைச் சொல்லும்படியாயிற்று.

அனைவரும் உறைந்துபோயினர்.
பெற்ற குழந்தை இறந்துவிட்டான். உடலை ஒளித்து வைத்து விட்டு பஜனையா? பாகவத ஆராதனையா?
இப்படி ஒரு பக்தியா? 
நம்பவே முடியவில்லை.

பெரியவராக இருந்த ஒரு பாகவதர், 
கோபன்னாவின் அருகே வந்தார்.

கோபு, இப்படி பக்தி பண்ற உனக்கே கஷ்டம் வந்தா, எல்லாருக்கும் ராமன் மேல நம்பிக்கையே போயிடும். குழந்தையைக் கொண்டு வா. எல்லாரும் ராம நாமம் சொல்வோம். அம்ருத மயமான நாமம் குழந்தையை எழுப்பும். ராமருக்காச்சு, நமக்காச்சு. எடுத்துண்டு வா..

கோபன்னா அசையாமல் நின்றார். 
அவரைத் தள்ளிக்கொண்டே போய் குழந்தை இருக்கும் இடத்தை அடைந்து அந்த பாகவதரே தூக்கிக்கொண்டு வந்துவிட்டார்.

நடுக் கூடத்தில்  வெந்துபோயிருந்த ஒன்றரை வயதுக் குழந்தையின்  உடல் கிடத்தப்பட்டது.

அனைவரும் சுற்றி அமர்ந்து

 ராம ராம ராம ராம ராம 

என்று நாமம் சொல்ல ஆரம்பித்தனர். 
எவ்வளவு நேரம் ஜபம் செய்தார்களோ தெரியாது. அனைவருமே தன்னை மறந்த நிலையில் ஜபம் செய்து கொண்டிருக்க வாசலில் ஒருவர் வந்தார்.

வடநாட்டைச் சேர்ந்த ஒரு பெரியவர் போல் இருதார். நெடுநெடுவென உயரம். தலையில் பச்சை நிறத்தில் தலைப்பாகை அணிந்திருந்தார்.ஒரு  கையில் பெரிய கோல். மற்றொரு கையில் கமண்டலம். 
கிடுகிடுவென்று கூடத்தினுள் வந்தவர்,

இன்னும் என்ன தூக்கம்? எழுந்திரு 
என்று கர்ஜித்துக் கொண்டு கமண்டலத்திலிருந்த நீரைக் குழைந்தையின் உடல் மீது தெளித்தார்.

உறக்கத்திலிருந்து எழுந்தவன் போல் கண்ணைத் துடைத்துக்கொண்டு  எழுந்து உட்கார்ந்தான் குழந்தை.

மாயாஜாலம்போல் அனைவரும் பார்த்துக் கொண்டே இருக்க, கிடுகிடுவென்று வெளியேறினார் வந்தவர்.

அனைவரும் குழந்தையைப் பார்த்துக் கொண்டிருக்க, வந்தவரைத் தேடி வாசலில் ஓடினார் கோபன்னா. 
அதோ தூரத்தில் அந்தப் பெரியவர். 

யோகி போலிருக்கிறார். யாராய் இருக்கும்?

 கரங்களை சிரமேல் குவிக்க, அந்தப் பெரியவர் திரும்பி கோபன்னாவைப் பார்த்தார். ஒரு கணம் கோதண்டமேந்தி, ராமனாகக் காட்சி கொடுத்தவர், சட்டென்று மறைந்துபோனார்.

ராமஜோகி மந்துகோனரே...

குதித்துக்கொண்டு பாட ஆரம்பித்தார் பிற்காலத்தில் பத்ராசல ராமதாசர் என்று அழைக்கப்பட்ட கோபன்னா..

நாமத்தால் ஆகாததும் உளதோ?

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment