ஈரேழு உலகையும் படைத்து காத்து அழிக்கும் திறன் பெற்ற இறைவன் ஒரு அசுரனை வதைப்பதற்காக அவதாரம் செய்ய வேண்டுமா என்ன?
இருக்கும் இடத்திலேயே இருந்துகொண்டு ப்ப்ப்பூஊஊஊ என்று ஒரு ஊதினால் போதும், அல்லது ஸங்கல்பம் செய்தாலும்கூட, ஹிரண்ய கசிபுவோ, ராவணனோ, கம்சனோ, அல்லது மற்ற அரக்கர்களோ மாண்டுவிட மாட்டார்களா?
இதற்காக ப்ரஹலாதன் கூப்பிடும் வரை காத்திருந்து, கஷ்டப்பட்டு பாதி மிருகமாகவும், பாதி மனிதனாகவும் உருவம் எடுத்துக்கொண்டு வந்து ஹா ஹா என்று அட்டஹாஸமெல்லாம் செய்து, விளையாட்டாகப் போரிட்டு, வாசற்காலில் அமர்ந்து வயிற்றைக் கிழிக்கவேண்டுமா என்ன?
அதில் வேறு அவருக்கு உக்ர ரூபமாம். சமாதனப்படுத்த மஹாலக்ஷ்மிக்கே பயமாம்.
இதற்காகவெல்லாமா அவர் வந்தார்?
ஈராறு மாதங்கள் கௌசல்யை வயிற்றிலாம், சமன் செய்யும் விதமாக எட்டு மாதங்கள் தேவகி வயிற்றிலாம். கடலைச் சற்று கொந்தளிக்கச் செய்தால் ராவணன் லங்கையோடு மூழ்கமாட்டானா?
சற்றே பூமி பிளந்தால், கம்சன் அரண்மனையோடு உள்ளே போகமாட்டானா?
செய்யலாம்தான். இறைவனால் முடியாதது உண்டா?
இறைவன் அதற்கா அவதாரம் செய்கிறான்?
அப்படிச் செய்தால், ப்ரஹலாதன் பகவான் மீது கொண்டிருக்கும் அன்பு எப்படி உலகுக்குத் தெரியும்?
பக்த ஸ்பர்சத்திற்கு பகவான் ஏங்குகிறானே. அந்தக் குழந்தையை மடிமேல் அமர்த்திக் கொள்ளும் சுகம் எப்படிக் கிடைக்கும்?
ந்ருசிம்மன், ஹரி என்ற திருநாமங்கள் நமக்கு எப்படிக் கிடைக்கும்?
ரகு வம்சத்தில் பிறந்ததால் அல்லவோ ராகவன் என்ற நாமம் கிடைக்கிறது?
தசரதனின் மைந்தனாகப் பிறந்ததால் அல்லவோ
தாஸோஹம் தவ தாசரதே ராமா
என்று பாடமுடிகிறது.
இல்லையென்றால் ராமா என்றோ தாசரதே என்று எப்படி அழைக்க முடியும்?
லக்ஷ்மணன், சத்ருக்னன் இவர்களின் தாஸ்ய பாவம், பரதனின் குரு பக்தி, சபரி, சுக்ரீவன், விபீஷணன், எல்லாவற்றுக்கும் சிகரமாய் ஹனுமான் இவர்களைப் பற்றியெல்லாம் நமக்கு எப்படித் தெரியும்?
வசுதேவருக்குப் பிறந்ததால் வாசுதேவன், நந்தன் வளர்த்ததால் நந்தலால், வெண்ணெய் திருடினால், நவநீதக்ருஷ்ணன், மலை பிடித்ததால் கிரிதாரி, முரனை அழித்ததால் முராரி, புண்டலீகனுக்காக வந்ததால் பாண்டுரங்கன், இன்னும் ஆயிரமாயிரம் லீலைகள், ஆயிரமாயிரம் பெயர்கள், ஆயிரமாயிரம் பக்தர்கள், நமக்கு எப்படிக் கிடைக்கும்?
ஒரு தாய் உறங்கும் குழந்தையை அப்படியே விட்டு விடுகிறாளா என்ன? நேரத்தில் எழுப்பி அதை பணிகளில் ஈடுபடுத்துகிறாள். பள்ளி முடிந்து விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தையை அப்படியே விடுகிறாளா? மறுபடி உள்ளே அழைத்து சாப்பிடவைத்து உறங்க வைக்கிறாள். காலை எழுப்பியவளே இரவானதும் உறங்கவும் வைக்கிறாள். அதுபோலவே இறைவன் ஒவ்வொரு ஜீவனும் தன்னோடு இரண்டறக் கலக்கும் வரை ஜனன மரணச் சுழலில் தள்ளி பக்குவம் வரும் வரை ஜீவனைத் தூய்மைப்படுத்துகிறான்.
இறைவனே அவதாரம் செய்தபோது ஓரிரு பக்தர்கள்தான் கிடைத்தார்கள். எங்கோ ஒரு ப்ரஹலாதன், எங்கோ ஒரு த்ருவன் இப்படி. இவ்வளவு கஷ்டப்பட்டு லோக வ்யவஹாரத்தை நடத்தினாலும் இறைவனை உணர்ந்தவர்கள் மிகக்குறைவு.
நான் பகவான் நான் பகவான் என்று அறைகூவல் விட்டுக்கொண்டு லீலைகள் செய்த க்ருஷ்ணனுக்கு கோபிகைகள், விதுரர், பீஷ்மர்,போன்ற சிலர் கிடைத்தாலும், கண்ணெதிரேயே நிந்தனைகளையும், வீண்பழியையும், அவச் சொற்களையும் தாங்கினானே.
மிகவும் கவலைப்பட்ட பகவான் வேறு உபாயம் செய்தான்.
கலி யுகத்தில் ப்ரத்யக்ஷமாக பகவானின் அவதாரம் இல்லை. தனது ஓரிரு அம்சங்களையோ, கலையையோ சாதுக்களாக பூமியில் இறக்கிவிட்டான்.
ஒரு ஆதி சங்கரரால், ஒரு ராமானுஜரால், ஒரு மத்வரால், ஒரு புரந்தரதாஸரால், ஒரு வல்லபரால் பல்லாயிரக் கணக்கானோரை வழி நடத்தி இறைவனிடம் கொண்டு சேர்க்க முடிந்தது.
மானைக் கொண்டு மான் பிடிப்பார் போலே என்று மனிதர் போலவே இறங்கி வந்த சாதுக்கள் மனிதர்களோடு பழகி, அவர்களுக்கு காலத்திற்கேற்ற கதியைக் காட்டி கரையேற்றமுடிந்தது.
கலி பொல்லாதது என்று கூற்று இருந்தபோதிலும், சாதுக்கள் கலி சாது, நல்லது என் கிறார்கள். ஏன்?
மற்ற யுகங்களில் த்யானத்தினாலும், தவத்தினாலும், யாகங்களாலும் அர்ச்சையினாலும் கஷ்டப்பட்டு இறைவனை அடையவேண்டும். ஆனால், கலியுகத்தில் இறைவனை நாமம் சொல்லி சுலபமாய் அடைந்துவிடலாமே.
ப்ரம்மத்திற்கு நாமரூபங்கள் ஏது?
எப்படி நாமத்தால் அழைப்பது?
அப்படியென்றால், நாம் கரையேறுவதற்காக பல்வேறு ரூபங்களை எடுத்துக்கொண்டு பல்வேறு லீலைகளை இறைவன் நிகழ்த்துகிறான்.
கிரிதாரி என்ற நாமம் மீராவுக்கென்றால், காளிங்க நர்த்தனன் வேங்கடசுப்பையருக்கு. ராமா என்ற நாமம் த்யாகராஜருக்கென்றால், சிவ நாமம் எங்கள் நந்தனாருக்கு.
எவ்வளவு நாமங்கள், எவ்வளவு பக்தர்கள்?
அத்தனை பேரும் எதற்காக? நாம் கரையேற, நாம் அவனது எல்லையற்ற அன்பை அனுபவிக்க, நாம் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க...
கருணைக் கடல் என்பது உருவகமா? இல்லை.
அந்த தாயிற்சிறந்த தயாபரனின் ஸ்வரூபமே கருணைதானே....
இனி.. நாமச்சுவையை நமக்கு ஊட்டும் நல்லோரின் கதைகளைப் பார்ப்போம்...
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசங்களிலிருந்து...
ஹரிப்பிரியா...இனிமே ஹரி பக்தப்பிரியா.....
ReplyDeleteஅருமை...அருமை