வலிகளை விலக்கும் நாமம்
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரை அறியாதவர்கள் இல்லை. தக்ஷிணேஸ்வரத்தில் குடி கொண்டிருந்த பவதாரிணி அவருக்கு ப்ரத்யக்ஷதெய்வம். மேலும் கோவிலில் நாம் வழிபடும் தெய்வ மூர்த்தங்கள் கற்சிலைகளல்ல; அவற்றுக்கு ஜீவன் உண்டு என்பதை பவதாரிணியின் மூக்கின் கீழ் பஞ்சை வைத்து அவள் சுவாசிப்பதை வைத்து நிரூபித்தார்.
பன்னிரண்டு சாதனைகளை முறையாகப் பின்பற்றி ஒவ்வொன்றிலும் வெற்றியடைந்து முடிவில் இறைவனைக் கண்டார்.
அவர் வேதாந்த ஸாதனைகளை தோத்தாபுரி என்ற ஒரு குருவிடம் பயின்று வந்தார்.
பரமஹம்ஸர் தினமும் மாலை வேளைகளில் அருகிலிருந்த கங்கைக் கரைக்குச் சென்று சிறிது நேரம் கையைத் தட்டிக்கொண்டு நாம ஸங்கீர்த்தனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
தோத்தாபுரியோ,
நான் சரீரம் வேறு ஆத்மா வேறு என்று எவ்வளவு உபதேசம் செய்தாலும் அதெல்லாம் ஒன்றும் உனக்குப் புரியவில்லையா? தினமும் இப்படி மாலை வேளைகளில் ரொட்டி தட்டுவதை விடமாட்டாயா?
என்று கேலி பேசுவார்.
தோத்தாபுரி எவ்வளவு கேலி செய்தபோதிலும், பரமஹம்ஸர் நாம ஸங்கீர்த்தனத்தை விடுவதாய் இல்லை.
ஒருநாள் தோத்தாபுரிக்கு கடும் வயிற்றுவலி வந்துவிட்டது. வலியினால் துடித்துப்போனவர், ஒரு கட்டத்தில் வலி தாங்காமல் கங்கையில் விழுந்து உயிரை விடத் துணிந்து விட்டார்.
பரமஹம்ஸர் ஓடிச் சென்று அவரைத் தடுத்தார்.
ஆத்மா வேறு சரீரம் வேறு என்பதெல்லாம் அனுபவத்தில் இல்லையா? வலி சரீரத்தில் தானே? நீர் ஆத்மானுபவத்தில் ஆனந்தமாய் இருக்கலாமே
என்றார்.
தோத்தாபுரிக்கு பேச்சு எழவில்லை. வலியினால் கண்ணீர் மிகுந்தது.
பரமஹம்ஸர் அவரை கங்கைக் கரையிலேயே அமரவைத்தார். தான் அவர் முன்னால் அமர்ந்து சிறிது நேரம் கையைத் தட்டிக்கொண்டு நாமகீர்த்தனம் செய்து, அதைத் தோத்தாபுரியைக் கேட்கச் செய்தார்.
அவ்வளவு தான் சற்று நேரத்தில் வலி பறந்தோடிவிட்டது.
பிறகு தோத்தாபுரி பரமஹம்ஸரைக் கேலி செய்ததற்கு வருந்தியதோடு, தானும் அவரோடு சேர்ந்து தினமும் சிறிது நேரம் நாம ஸங்கீர்த்தனம் செய்யத் துவங்கினார்.
நாமாத்தால் கலியே விலகும்போது வலி விலகாதா என்ன?
இறைவனை உணர்ந்த மஹான்களே நாம ஸங்கீர்த்தனத்தை விரும்பிச் செய்யும்போது, நமக்கு வேறு கதி ஏது?
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
No comments:
Post a Comment