வேடன் எழுதிய காவியம் - 1
ரத்னாகரன் என்ற வேடன் குடும்பத்துடன் காட்டில் வாழ்ந்துவந்தான். மிருகங்களை வேட்டையாடுவதோடு, கொள்ளை, வழிப்பறி எல்லாம் செய்வதோடு, பொருளைத் தரமறுத்தால், கொலையும் செய்துவிடுவான்.
இப்படி அத்தனை பாதகங்களையும் செய்து வந்தவன் என்ன புண்ணியம் செய்தான் என்று தெரியவில்லை.
அவன் வாழ்ந்துவந்த காட்டின் வழியாக நாரதமஹரிஷி வந்தார்.
வாழ்வில் ஒரு மஹானுடன் எந்த வகையிலாவது தொடர்பு கிடைத்தால் போதும். அதன் பிறகு, நமது வாழ்வை அவர் பார்த்துக்கொள்கிறார். நம்மைத் தரதரவென்று இழுத்துச் சென்று இறைவன் திருவடியில் சேர்க்கும் வரை அவர் ஓய்வதில்லை.
நாரதர் எப்போதும் நாமஸங்கீர்த்தனம் செய்பவர். அழகாகப் பட்டு உடுத்தி, உச்சியில் கொண்டையுடன், நெடுநெடுவென்று உயரமாக இருப்பார். மிகுந்த தேஜஸ்வியாக அழகாக இருப்பார்.
நாராயண நாமத்தை மிக மதுரமான குரலில் பாடிக்கொண்டு வரும் அவரைப் பார்த்தான் ரத்னாகரன்.
பெரிய பணக்காரரா இருப்பாரோ, நகை எதுவும் போடலையே, காட்டில் நம்மளப் பத்தி யாராச்சும் சொல்லிருப்பாங்க. கழட்டி மடியில் வெச்சிருப்பார் போல. நல்லா பளபளன்னு ராசா கணக்கா மின்றாரே. ஏதாச்சும் கிடைக்கும் பாக்கலாம்.
திடீரென்று அவர் முன்பாகச் சென்று குதித்தான் ரத்னாகரன். பயப்படுவார் என்று எதிர்பார்த்தால் நாரதர் சிரித்தார்.
அவரது தைரியத்தைப் பார்த்து கொஞ்சம் மிரண்டுதான் போனான் ரத்னா.
பெரிய கத்தியை கழுத்தின் அருகே வைத்து
மரியாதையா இருக்கறதையெல்லாம் எடுங்க.
சிரித்தார் மஹரிஷி.
என்கிட்ட இந்த வீணைதான் இருக்கு.
விளையாடறியா? இதை வெச்சுக்கிட்டு நான் என்ன செய்ய? நகை, காசு எல்லாம் எடு.
இதோ பாருப்பா, நான் ஒரு நாடோடி. என்கிட்ட காசு பணமெல்லாம் இல்ல.
நம்பறமாதிரி இல்லையே. நீ நல்லா பள பளன்னு ஷோக்கா இருக்க. நகையெல்லாம் கழட்டி இடுப்பில் ஒளிச்சு வெச்சிருக்கியா?
சிரித்தார் நாரதர். இல்லப்பா..
மேல் வஸ்திரத்தை உதறினார்.
அவனுக்கு அவரை விட மனம் வரவில்லை. பார்த்துக் கொண்டே இருந்தான்.
அவரது கடாக்ஷம் பரிபூரணமாக அவன் மேல் விழுந்தது.
ஏம்பா நீ இப்படி வழிப்பறி எல்லாம் செய்யறியே, அதெல்லாம் பெரிய பாவம் தெரியுமா?
பாவமா? அப்படின்னா?
இறந்ததுக்குப் பின்னால், எண்ணெய்க்கொப்பரையில் போட்டு வாட்டுவாங்க.
என்னா சாமி உளறற?
ஆமாம். மத்தவங்களை கஷ்டப்படுத்தினா அதற்கு தண்டனை உண்டு.
என்னை தண்டிக்கறவங்க யாரு?
ஹாஹா ஹா என்று சிரித்தான்.
இறைவன்னு ஒருத்தர் இருக்கார். அவர்தான் உன்னை என்னை எல்லாரையும் படைக்கிறார்.
சாமி என்னைப் படைச்ச என் அப்பா வீட்டில் இருக்கார். நீ இறைவன்ங்கற?
ஆனா, உன்னைப் பாத்தா பொய் சொல்ற மாதிரியும் தெரியல.
சரி. நீ ஒன்னு பண்றயா? நீ வீட்டில் போய் உன் குடுமத்தார்கிட்ட, நீ செய்யற பாவத்துக்கெல்லாம் அவங்களும் பங்கு வாங்கிப்பாங்களான்னு கேட்டுண்டு வா.
என்ன சாமி சொல்ற? அப்படியே தப்பிச்சு ஓடலாம்னு பாக்கறயா?
நான் எங்க ஓடப்போறேன்? நம்பிக்கையில்லன்னா என்னை இந்த மரத்தில் கட்டிப்போட்டுட்டுப் போய்வா.
அவர் குரலில் இருந்த வசீகரம் அவனை என்னவோ செய்தது.
ஒரு கொடியை எடுத்து அவரை அருகிலிருந்த மரத்தில் கட்டிப்போட்டான்.
இதோ இப்படிங்கறதுக்குள்ள வந்திருவேன் தப்பிக்கலாம்னு மட்டும் நினைக்காத
என்று சொல்லிவிட்டுப் போனான்.
பாவம் அவனுக்குத் தெரியாது..
அவன் தான் அந்த மஹானின் கருணையில் தப்பிக்கவே முடியாமல் மாட்டிக்கொண்டான் என்று.
வேடன் வீட்டில் நிகழ்ந்ததை அடுத்த பதிவில் பார்ப்போம்.
#மஹாரண்யம் ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment