Wednesday, January 29, 2020

நாமம் ஒன்றே போதுமே.. - 9

அந்திம நேரத்தில் சொன்ன‌ நாமம்

ஒழுக்கமான நெறிமுறைகளோடு வாழ்ந்து வந்தான் அஜாமிளன் என்ற அந்தணன். ஒரு நாள் காட்டிற்கு தர்ப்பை, ஸமித் முதலியவைகளைச் சேகரிக்க வந்தவன் காணத் தகாத காட்சியைக் கண்டான். ஒரு பெண்ணும் ஒரு ஆணும் சேர்ந்திருந்த காட்சியை ஒரு முறை  கண்டதுமே
அவனது மனத்தில் விகாரம் ஏற்பட்டது.

தெளிவற்ற சிந்தனைகளோடு சிறிது தூரம் சென்றவனுக்கு மிகவும் தாகம் எடுத்தது. ஏதேனும்‌ நீர்நிலை இருக்கிறதா என்று தேடியவனுக்கு ஒரு மரப்பொந்தில் இருந்த மண் கலயம்‌ தென்பட்டது.

தாகத்தால் தவித்துக் கொண்டிருந்தவன், சிந்தனைத் தெளிவும் இல்லாமல் கலயத்தில் என்ன இருக்கிறதென்று ஆராயாமல் குடித்தான்.

மண்கலயத்தில் இருந்ததோ ஒரு வேடன் வைத்துவிட்டுப் போன கள்.

ஏற்கனவே மதி கலங்கியவன், கள்ளையும் குடித்துவிட்டு மொத்தமாய் அறிவை இழந்தான்.

மறுபடி ஏற்கனவே கண்ட பெண்ணைத் தேடிப் போய் அவளுடன் வாழ ஆரம்பித்தான்.

தனது குலம், படிப்பு, ஒழுக்கம் அத்தனையும் விட்டு வனத்திலேயே வசிக்கத் துவங்கினான்.
அவனுக்குப் பல பிள்ளைகள் பிறந்தன. அவர்களைக் காப்பாற்றுவதற்காக வழிப்பறி, கொலை, கொள்ளை முதலியவைகளில் ஈடுபட்டுப் பொருளீட்டினான்.

பஞ்சமா பாதகங்கள் அனைத்தையும் செய்த அவனுக்கு வயதாயிற்று. ஒரு நாள் அவனும் மரணப்படுக்கையில்  வீழ்ந்தான்.

ஏதோ ஒரு பூர்வ புண்ணியத்தினால், தனக்கு கடைசியாகப் பிறந்த குழந்தைக்கு நாராயணன் என்று பெயரிட்டிருந்தான். மிகுந்த வயதான பிறகு, பிறந்த குழந்தையான நாராயணன் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தான். 

எப்போது பார்த்தாலும் நாராயணா நாராயணா என்று அந்தப் பையனை அழைத்துக் கொண்டே இருப்பான்.

படுத்த படுக்கையாக இருந்த தந்தையின்மீது அவனுக்கு பாசம் இல்லை. விளையாட விடாமல் எப்போதும் அழைத்துக்கொண்டே இருக்கிறான் என்று சலித்துக்கொண்டு, கேட்டும் கேளாதான்போல் அலட்சியம் செய்வான்.

அஜாமிளனுக்கு திடீரென்று அவனைச் சுற்றி மூன்று பெரிய கோரமான கோரைப்பற்களை உடைய கருப்பு நிறம் கொண்ட உருவங்கள் தெரிந்தன.

அவனுக்கு மிகவும் பயமாக இருந்தது. அவர்கள் எம தூதர்கள் என்று தெரிந்து கொண்டான். பயம் மேலிட எப்படியோ சக்தியை திரட்டி தூரத்தில் விளையாடிக்கொண்டிருந்த மகனை பெருங்குரலெடுத்து

 நாராயணா.. 

என்று அழைத்தானே பார்க்க வேண்டும். 
அவ்வளவுதான். 

அபயம்! 

என்று இடி போல் ஒரு குரல் கேட்டது.
மிக மிக அழகான உருவம்‌ கொண்ட நான்கு பேர்கள் வந்துவிட்டனர். அவர்கள் நான்கு புஜங்களோடும், காது வரை நீண்ட கண்களோடும், காதுகளில் அழகான குண்டலங்களோடும், மிக அழகான ஆபரணங்களோடும் விளங்கினர். பார்ப்பதற்கு மஹாவிஷ்ணுபோல் தோற்றமளித்தனர். சங்கு சக்கரம் தான் இல்லை. 
எமதூதர்களுக்கு அவர்கள் யாரென்று தெரியவில்லை.

யார் நீங்கள்? இவன் மஹா பாபி. இவனுக்கு ஏன் அபயம் கொடுக்கிறீர்கள்?

நாங்கள் பகவானின் பார்ஷதர்கள்.
இவனை எங்களோடு வைகுண்டம் அழைத்துப்போக வந்தோம். 

அதெப்படி?
நாங்கள் எமதர்மராஜானின் கிங்கரர்கள்.
இவனது உயிரை எடுக்க வந்திருக்கிறோம். இவன் செய்த பாவங்களுக்கு  இவனுக்கு நரகவாஸம் காத்திருக்கிறது..

இவன் செய்த பாவங்களெல்லால்ம் அழிந்துவிட்டன.நீங்கள் வேண்டுமானால் இப்போது சென்று இவன் பாவக் கணக்கைச் சரிபாருங்கள். 

எமகிங்கரர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இதுநாள்வரை இப்படி நிகழ்ந்ததே இல்லை. அவர்களைத் தடுப்பவர் எவரும் இல்லை. குழப்பத்தோடு எமலோகம் சென்றனர்.

விஷ்ணு பார்ஷதர்கள் அஜாமிளனிடம் நீங்கள் விரும்பும்போது  வைகுண்டம் வாருங்கள்..என்று சொல்லி விட்டுச் சென்றனர். 

அஜாமிளனுக்குத் தான் காண்பது கனவா நனவா என்பது புரியவில்லை. கிள்ளிப் பார்த்துக்கொண்டான். அவனது தளர்வெல்லாம் மறைந்து விட்டிருந்தது. எப்பேர்ப்பட்ட பாவச் செயல்களைப் புரிந்தோம் என்று வெட்கினான். மகனை அழைத்ததற்கே விஷ்ணு பார்ஷதர்கள் வருவார்கள் என்றால் விஷ்ணுவை உணர்ந்து ஆசையாய் அழைத்தால் அவரே வருவாரே.. அவ்வளவு க்ருபாளுவா? 
பேசாமல், யாரிடமும் சொல்லாமல் கிளம்பி கங்கைக் கரைக்குச் சென்று நாராயண நாமத்தை விடாமல் ஜபம் செய்யத் துவங்கினான்..

வேலையைச் செய்ய இயலாமல் எமலோகம் திரும்பிச்சென்ற கிங்கரர்களுக்கு என்னாயிற்று?
அடுத்த பதிவில்..

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment