Wednesday, January 29, 2020

நாமம் ஒன்றே போதுமே.. - 2

கொடுங்கோலனுக்கும் கதி

 விஷ்ணு தர்மம்‌ என்ற உபபுராணத்தில் ஒரு கதை வரும்.

தீவினையாளனான அரசன் செய்த கொடுங்கோன்மையைப் பொறுக்காமல் நாட்டு மக்களே அவனை அடித்து விரட்டி விடுவர்.

ஸாதுக்கள் யாரையாவது நினைத்தாலோ, அல்லது ஒருவர் பெயரை உச்சரித்தாலோகூடப்  போதும். இறைவன் அந்தப் பெயருடையவனுக்கு அருள் செய்து விடுகிறான்.

ஸ்ரீ மத் பாகவதத்திலும் நாரதர் தன் பூர்வாசிரமக் கதையை வ்யாசரிடம்  சொல்லும்போது, 
இறைவன் எனக்கு அருள் செய்ததற்கு என்ன காரணம் தெரியுமா?

நான் செய்த தவமோ த்யானமோ அல்ல. சிறுவயதில் எங்கள் கிராமத்திற்கு வந்த சாதுக்கள், அந்தக் குழந்தை எப்படி இருக்கிறதோ என்று என்னைப் பற்றி நினைத்திருப்பார்கள். அதனால்தான் இறைவன் எனக்கு அருள் செய்தான் என்கிறார்.

இந்தக் கொடுங்கோல் அரசனின் விஷயத்தில் அப்படி எதுவும் நடந்து விடக்கூடாது. எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் அவனுக்கு இறைவன் அருள் கிடைக்கக்கூடாது. அவன் தன் பாவத்தின் பலனை அனுபவிக்கட்டும்.
மேலும் அவன் பெயரைச் சொன்னால் அவனது பாவத்தின் பங்கு நமக்கும் வந்துவிடும்.
 என்று அவன் பெயரைக்கூட ஒருவரும் உச்சரிக்க மாட்டார்கள்.

அவனைக் குறிப்பிடும் இடங்களில் எல்லாம் அரச குல உறவினன் என்று பொருள் படும்படி க்ஷத்ரபந்து என்றே அழைத்தனர்.

அப்படிப்பட்ட அந்த மாபாதகங்கள் செய்தவனை நாட்டை விட்டு விரட்டிவிட்டனர்.

அவன் எங்கோ தூர தேசம் சென்று ஒரு கிராமத்தில் மாடுகளை மேய்த்துப் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தான்.

ஒருநாள் அவன் ஒரு முனிவரின் ஆசிரமத்தைக் கண்டான்.

அந்த இடத்தின் ஸாந்நித்யத்தினால் அவன் மனதிலும் கூட தன்னைப் பற்றிய கழிவிரக்கம் ஏற்பட்டது. தான் மிகவும் பாவம் செய்துவிட்டதாக உணர்ந்தான்.

 தனக்கு ஏதேனும் விமோசனம் இருக்கிறதா, என்று அறிவதற்காக அந்த ஆசிரமத்தினுள் நுழைந்து அங்கிருந்த முனிவரை வணங்கினான்.

அவரிடம் தன் கதையைச் சொன்னான்.
அவர் நாட்டு மக்கள் உன்னை ஏன் விரட்டினார்கள் என்று வினவ, அவன் தான் செய்த பாவங்களைச் சொல்ல ஆரம்பித்தான்.

முனிவருக்கு மயக்கமே வந்துவிட்டது.

முனிவர் காதைப்பொத்திக்கொண்டு 
போதுமப்பா போதும். 
என்றார்.

இத்தகைய கொடுஞ்செயல்களைத்  துணிந்து செய்தவனுக்கு என்ன ப்ராயசித்தம் சொல்வதென்று அவருக்குப் புரியவில்லை.

தானே வந்து வணங்கிக் கேட்பவனுக்கு விமோசனம் சொல்லாமல் அனுப்பவும் அவரது கருணை இடம் தரவில்லை.

அப்போது ஆசிரமத்தின் வெளியே ஒரு மாடு வேகமாய் ஓட, இவன் கோவிந்தா மாடு ஓடுகிறது பார். பிடி என்று கத்தினான்.

முனிவரின் முகம் மலர்ந்தது.
அச்சிறுவன் பெயரை என்னவென்று சொன்னாய்?

கோவிந்தன்

உன் வேலைகளுக்காக அவனை அழைப்பாயா?

ஆம் முனிவரே, கோவிந்தன் என்ற அந்தச் சிறுவனை வேலைக்கு வைத்திருக்கிறேன். அவன் மாடுகளைக் குளிப்பாட்டுவது, தொழுவத்தைச் சுத்தம் செய்வது போன்ற பணிகளைச் செய்கிறான்.

அவனை ஒரு நாளைக்கு எத்தனை முறை அழைப்பாய்?

ஒரு நாளைக்கு நூறு முறையாவது கோவிந்தா கோவிந்தா என்று அவனை அழைத்து வேலை வாங்குவேன்.

போதுமப்பா. அந்தப் பையனை விட்டுவிடாதே. உன் பாவங்களுக்கு ப்ராயச்சித்தம் செய்தாகிவிட்டது. இனியும் நீ செய்யவேண்டியதொன்றுமில்லை. கவலைப் படாதே. இப்போது என்ன செய்கிறாயோ அதையே தொடர்ந்து செய். அந்திம காலத்தில் முக்தி கிட்டும் 
என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அவனும் தான் அழைப்பது அந்த இறைவனின் பெயரைத்தான் என்று அறியாமலே, பலமுறை அழைத்து, பாவங்கள் முழுதும் அகலப்பெற்று, கடைசியில் முக்தியடைந்தான்.

இந்தக் கதையினால் அறியப்படுவது-

1. அறிந்தோ அறியாமலோ கூட இறைவன் பெயரைச் சொன்னாலும் அது பாவங்களை அழித்து முக்தி கொடுக்கிறது.

2. ஸாதுக்கள் யாரையாவது ஒரு முறை நினைத்தாலும் இறைவன் அருள் செய்துவிடுவான்.

3. கொடுங்கோல் ஆட்சியைப் பொறுத்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை. நல்லோர் அனைவரும் திரண்டால் நல்லாட்சியை அமைத்துக்கொள்ளலாம்.

மொய்த்த வல்வினையுள்நின்று மூன்றெழுத்து டையபேரால்
கத்திரபந்துவுமன்றே பராங்கதி கண்டுகொண்டான். - தொண்டரடிப்பொடியாழ்வார்

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment