இறக்கை முளைத்தது
ராமாயணத்தில் ப்ரத்யக்ஷமாக ராம நாம வைபவத்தை எடுத்துக்காட்டும் நிகழ்வுகளில் முக்கியமானது இது.
ராமன் சீதையைத் தேடி இலக்குவனுடன் காட்டில் அலைந்து கொண்டிருந்தான். சீதை எங்கிருக்கிறாள் என்று சிறிய துப்பு கூட கிடைக்கவில்லை. சுக்ரீவனுடன் நட்பு பாராட்டி, பிறகு சுக்ரீவன் உலகெங்கிலும் உள்ள தன் குரங்கு சேனையை வரவழைத்தான்.
அந்த சேனையைப் பல பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு தலைவனை நியமித்து திசைக்கொரு படையை அனுப்பினான்.
தென் திசையை நோக்கி அனுப்பிய படைக்கு அங்கதனிடம் தலைமைப் பொறுப்பு கொடுத்தான். அங்கதன் இளவரசன், மேலும் அனைவரையும் விட சிறியவன் என்பதால், அவனோடு ஜாம்பவான், ஹனுமான் ஆகியோரையும் அனுப்பினான்.
தென்திசை நோக்கிப் பயணித்தது அங்கதன் தலைமையிலான வானர சேனை.
ரிஷ்யமூக பர்வதம் துவங்கி குமரி முனை வரை ஒரு அங்குலம் விடாமல் சீதையைத் தேடினார்கள்.
சீதையைத் தேடிவந்து விவரம் சொல்வதற்கு அவர்களுக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.கொடுக்கப்பட்ட அவகாசம் முடியும் நிலை வந்துவிட்டது.
சேனை முழுதும் குமரிக் கரைக்கு வந்துவிட்டது.
கண்ணெதிரே விரிந்து பரந்திருக்கும் கடல்.
கடைசிவரை வந்துவிட்டோமே..
இதற்கு மேல் நிலப்பரப்பு இருக்க வாய்ப்பே இல்லை.
எவ்வளவு தேடியும் அன்னையைக் காணோமே..
அன்னையைப் பற்றிய சிறு விவரம் கூடக் கிடைக்கவில்லையே..
ஒரு தகவலும் இல்லாமல் திரும்பிச் சென்றால் ராமர் மனமுடைந்து உயிரையே விட்டாலும் விடுவார்..
செய்தி கொண்டுவர இயலாமைக்கு மஹாராஜா நமக்கு மரணதண்டனை விதிப்பார்.
மேலும் ராமர் இல்லையென்றால் சுக்ரீவ மஹாராஜா நண்பருக்கு உதவ முடியவில்லையென் று வருந்தி, அவரும் உயிரை விடுவார்..
ஆளாளுக்கு விரக்தியின் உச்சத்தில் கடலைப் பார்த்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தனர்.
நாம் திரும்பிப்போய் சேதி சொல்லி அவர்கள் துன்பப்படுவதைக் காண்பதை விட, நாம் எல்லோரும் இந்தக் கடலில் வீழ்ந்து உயிரை விட்டுவிடலாம்.
என்றாவது ஒருநாள் திரும்பிவருவோம் என்று நினைத்து அவர்கள் உயிர் வாழ்வார்கள்.
சிறிது நேரம் ப்ரார்த்தனை செய்துவிட்டு உயிரை விடலாம் என்று எல்லோரும் கடற்கரையில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டார்கள்.
அப்போது சிறகுகள் இல்லாத ஒரு பெரிய கழுகு மெதுவாக அவர்களின் அருகே நகர்ந்து நகர்ந்து வந்து கொண்டிருந்தது..
அதைப் பார்த்த நீலன் என்ற வானரன் சொன்னான்..
ராம காரியத்திற்காக ஜடாயு என்ற கழுகு உயிரை விட்டதாம். இந்தக் கழுகு என்னடாவென்றால் நம்மைக் கொத்தித் தின்ன வருகிறது..
ஜடாயு..
ஜடாயு..
அந்தக் கழுகிற்குத் தூக்கிவாரிப் போட்டது.
சொல்லுங்கள்.
சொல்லுங்கள்.
என்ன சொன்னீர்கள்?
ஜடாயுவா?
அவனுக்கென்ன?
நீ ஏன் ஜடாயுவைப் பற்றிக் கேட்கிறாய்?
அவர் பெயரைச் சொல்லக்கூட உனக்குத் தகுதியில்லை..
இல்லை. ஜடாயு என் தம்பி. என் பெயர் சம்பாதி. ஜடாயு இறந்துவிட்டானா? எப்படி?
தம்பி என்றதும் பரிதாபப்பட்டு, அதுவரை நடந்த, தனக்குத் தெரிந்த ராமகாதை முழுவதையும் ஜாம்பவான் விவரித்தார்.
இப்போது நாங்கள் அன்னையைத் தேடி வந்த பாதையில் தோல்வியுற்று உயிரை விடப்போகிறோம். நீ எங்களை உண்டு பசியாறலாம்.
சம்பாதியின் கண்களில் நீர்..
என் தம்பி ஜடாயுவின் மேல் நான் உயிரையே வைத்திருக்கிறேன். சூரியபகவானின் சாரதியான அருணனின் புதல்வர்கள் நாங்கள்.
இருவரும் ஒரு சமயம் தந்தையைக் காணலாம் என்று போட்டி போட்டுக் கொண்டு, சூரியனை நோக்கிப் பறந்தோம். ஒரு கட்டத்தில் உஷ்ணம் தாங்கமுடியாமல் ஜடாயு தவித்துப்போனான் அவனைக் காப்பாற்ற வேண்டி அவனை என் சிறகுகளால் மூடிக்கொண்டேன்.
அப்போது என் சிறகுகள் முழுதும் எரிந்துபோய் இந்தக் கந்தமாதன மலையடிவாரத்தில் விழுந்தேன்.
ஜடாயுவும் வெப்பம் தாங்காமல் எங்கே யோ விழுந்து வி ட் டான். எங்காவது மகிழ்ச்சியாய் இருப்பான் என்று நம்பினேன். அவனே போய்விட்ட பிறகு எனக்கும் உயிர்வாழ விருப்பமில்லை. உங்களோடு சேர்ந்து நானும் உயிரைத் தியாகம் செய்யப்போகிறேன் என்றது.
அனைவரும் கண்ணீரோடு கடலைப் பார்த்துக் கொண்டு அமர்ந்து உரத்த குரலில்
ராம ராம ராம ராம
என்று சொல்லத் துவங்கினர்.
அப்போது..
ஆம்..
நாமம் சொல்லச் சொல்ல சொல்ல,
சம்பாதியின் சிறகுகள் மெதுவாக முளைக்கத் துவங்கின.
அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே
ஒவ்வொன்றாக முளைத்து முளைத்து சிறிது நேரத்தில் முழு சிறகும் வளர்ந்து பெரிய இறக்கைகள் உண்டாயின.
இந்த அற்புதத்தைக் கண்டு, ஆனந்தக்கூத்தாடினர் அனைவரும்.
இப்போதுதான் நியாபகம் வந்தவன்போல் சம்பாதி சொல்லத் துவங்கினான்..
ஆமாம்.. பல மாதங்களுக்கு முன் இலங்கேஸ்வரன் ஒரு பெண்ணைக் கதற கதற புஷ்பக விமானத்தில் அழைத்துச் சென்றான்.
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அவள் சீதையாகத்தான் இருக்கவேண்டும்.
அவனது நகரம் கடலின் நடுவே நூறு யோஜனை தூரத்தில் உள்ளது. என் கண்பார்வை மிகக் கூர்மையானது.
நான் இப்போதே மலை மீதேறி அந்தப் பெண் அங்கிருக்கிறாளா என்று பார்க்கிறேன்.
என்று கூறிப் பறந்து சென்றான்.
கந்தமாதன மலைமீதேறி பார்த்துவந்து அசோகவனத்தில் ஒரு பெண் தனித்திருப்பதையும், சொன்னான்.
அதன் பின் அவர்களுக்கு உற்சாகம் வந்ததும், அனுமன் லங்கைக்குச் சென்று அன்னையைக் கண்டுவந்து சொன்னதும் அனைவரும் அறிவோம்.
அனைவரும் உயிர் விடத் துணிந்த நேரத்தில் அற்புதத்தை நிகழ்த்தி நம்பிக்கை ஊட்டியது ராமநாமமன்றோ?
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment